நலிந்த இசைகலைஞர்களுக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ரூ.20 லட்சம் உதவி


நலிந்த இசைகலைஞர்களுக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ரூ.20 லட்சம் உதவி
x
தினத்தந்தி 20 Jun 2020 5:12 AM IST (Updated: 20 Jun 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

நலிந்த இசைகலைஞர்களுக்குஇளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு பெப்சி சார்பில் நிதி திரட்டி உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் இசை கலைஞர்களுக்கு உதவ இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளனர்.

இதுபோல் இசையமைப்பாளர்கள் இமான், அனிருத் ஆகியோர் தலா ரூ.3 லட்சமும் தமன் ரூ.1.50 லட்சமும் விஜய் ஆண்டனி, ஜிப்ரான் ஆகியோர் தலா ரூ.50 ஆயிரமும் வழங்கி உள்ளனர். மொத்தம் ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் வசூலாகி இருப்பதாக இசையமைப்பாளர்கள் சங்க தலைவரும் பெப்சி துணைத் தலைவருமான தினா தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “இசையமைப்பாளர்கள் சங்கத்தில் 1248 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே தலா 25 கிலோ அரிசியும் ரூ.500 உதவி தொகையும் வழங்கப்பட்டது. ரூ.1500 மதிப்புள்ள கூப்பனும் வினியோகிக்கப்பட்டது.

மேலும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வழங்கிய உதவித் தொகையை சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் பிரித்து கொடுத்துள்ளோம். கொரோனா பாதிப்பினால் இந்த வருடம் உறுப்பினர்கள் சந்தா தொகை செலுத்த வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சங்கமே சந்தா தொகையை செலுத்தும். இசை கலைஞர்களுக்கு நிதி வழங்கிய இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு வாழ்க்கை முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளேன்“ என்றார்.

Next Story