பாலியல் வன்கொடுமை: சிறுமி கொலைக்கு நடிகைகள் கண்டனம்


பாலியல் வன்கொடுமை:   சிறுமி கொலைக்கு நடிகைகள் கண்டனம்
x
தினத்தந்தி 4 July 2020 12:50 PM IST (Updated: 4 July 2020 12:50 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் உள்ள அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்த கொலைக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. நடிகைகள் பலர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், “சமூகத்தில் பல கொடூர குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த நாம் ஹேஷ்டேக்கை பயன்படுத்த வேண்டி உள்ளது. அப்படியெனில் கவனிக்கப்படாமல் போகும் குற்றங்களின் நிலைமைகள் என்ன ஆகும்? மனித சமூகம் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து வருகிறது. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. கொடூர ஆசைகளை நிறைவேற்ற குழந்தைகளை கொல்கின்றனர். மனித தன்மையற்ற இந்த உலகத்துக்கு மீண்டும் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்க தகுதி இல்லை. பிரச்சினைகள் ஹேஷ்டேக்கில் வந்தால்தான் நீதி கிடைக்கும் என்ற நிலைமை இருக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில். “சிறுமியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். நமது நீதி துறை அமைப்பு என்ன செய்கிறது. கைது செய்கிறார்கள். ஆனால் எதுவும் நடப்பது இல்லை. நான் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைப்பது என்ன வென்றால் பாலியல் வன்கொடுமை செய்பவனுக்கு முதல் முறையாக இருந்தாலும் மரண தண்டனை கொடுக்க சட்டம் இயற்றுங்கள். அந்த பயம் இருந்தால் மட்டும்தான் இவர்கள் நிறுத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் இதயத்தை வலிக்க செய்யும் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மாற மாட்டார்கள் கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட பதிவில், “இதயத்தில் ரத்தம் கசிகிறது. எப்படி சிலர் மனித தன்மையே இல்லாமல் இருக்கிறார்கள். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

Next Story