தேசிய வியாதியான மறதி: சமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்


தேசிய வியாதியான மறதி:  சமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்
x
தினத்தந்தி 7 July 2020 12:06 PM IST (Updated: 7 July 2020 12:06 PM IST)
t-max-icont-min-icon

மறதி ஒரு தேசிய வியாதி என்று நடிகர் பிரசன்னா, டைரக்டர் சேரன் ஆகியோர் சாடியுள்ளனர்.

நடிகர் பிரசன்னா சமூக விஷயங்கள் பற்றி சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அறந்தாங்கி அருகே ஜெயப்பிரியா என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆனது. அதில் நடிகர் நடிகைகள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா “ஜெயலலிதா, ஜெயராஜ் அல்லது ஜெயப்பிரியா சம்பவங்கள் அடுத்த பரபரப்பான மரணம், கொலை, பாலியல் வன்கொடுமை செய்திகள் வரும்வரைத்தான்.

அதன்பிறகு நீதி கோரும் ஹேஷ்டேக்குகள் மாறும். ஆனால் மாற வேண்டியது எதுவும் மாறாது. இவையெல்லாம் சோர்வை ஏற்படுத்தி உள்ளன. சோகம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

மறதி ஒரு தேசிய வியாதி” என்று சாடியுள்ளார். பிரசன்னாவின் கருத்துக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள டைரக்டர் சேரன், “மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு. எல்லாவற்றையும் அடுத்த செய்தியில் மறந்து விடுவான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை காலம் நடந்த அத்தனை பட்டாபிஷேகங்களும் நடத்தப்பட்டன” என்று கூறியுள்ளார்.

Next Story