‘சில்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை’ - ரீமா கல்லிங்கல்


‘சில்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை’ - ரீமா கல்லிங்கல்
x
தினத்தந்தி 5 Dec 2021 10:09 AM GMT (Updated: 5 Dec 2021 10:09 AM GMT)

‘சில்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை’ என ரீமா கல்லிங்கல் படத்தின் அனுபவங்களை அவர் நிருபர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் மூலம் டைரக்டராக உயர்ந்து இருக்கிறார். ஒரு ஸ்டண்ட் மாஸ்டரிடம் இருந்து இப்படி ஒரு உணர்ச்சிகரமான படத்தை எதிர்பார்க்கவில்லை என்று எல்லோரையும் பேசவைத்து இருக்கிறது ‘சித்திரைச் செவ்வானம்.’ ஒரு அப்பா-மகளுக்கான பாசத்தை படம் பேசியிருக்கிறது.

சமுத்திரக்கனி அப்பாவாகவும், பூஜா கண்ணன் (டாக்டருக்கு படிக்கும்) மகளாகவும் உருகவைத்து இருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு, படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் விஜய். (கிரீடம், தலைவா, சேவல், மதராச பட்டினம், தலைவி ஆகிய படங்களை இயக்கியவர்) போலீஸ் அதிகாரியாக ரீமா கல்லிங்கல் நடித்து இருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் நிருபர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.

“சில்வா மாஸ்டர் இயக்குகிறார் என்றதும் அது ஒரு அதிரடி சண்டை படமாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் இப்படி ஒரு படத்தை இயக்குவார் என்று நம்ப முடியவில்லை. சமுத்திரக்கனியை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.

இந்த படத்தில் எனக்கு போலீஸ் அதிகாரி வேடம். நடிப்பதற்கு சவாலாக இருந்தது. நிறைய பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஒரு நடிகையாக அந்த வேடம் திருப்தி அளித்தது” என்றார்.

“இந்த கதை என்னை உலுக்கியது. ரீமாவை இப்போது பார்த்தாலும் பயமாக இருக்கிறது. கண்ணிலேயே பேசுவார்” என்று சமுத்திரக்கனி சொன்னார்.

“சித்திரைச் செவ்வானம் படத்தின் ஆன்மாவே சமுத்திரக்கனியும், பூஜாவும்தான்” என்றார் டைரக்டர் சில்வா.

Next Story