நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை 2-வது நாளாக விசாரணை - கைதாகுவாரா?- பரபரப்பு


நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை 2-வது நாளாக விசாரணை - கைதாகுவாரா?- பரபரப்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 4:11 PM IST (Updated: 10 Dec 2021 4:11 PM IST)
t-max-icont-min-icon

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் விலையுயர்ந்த பரிசு பொருட்கள் பெற்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை 2-வது நாளாக தீவிர விசாரணை நடத்தியது. அவர் கைதாகுவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி நட்சத்திர ஓட்டலில் அந்த மாநில போலீசாரிடம் சிக்கியவர் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். அரசியல் தரகராக செயல்பட்ட அவர், பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் ரூ.200 கோடி வரை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. அவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் சிறையில் இருந்தபடியும் தனது பணம்பறிப்பு தொழிலை அமோகமாக நடத்தி வந்தது தெரியவந்தது.

மோசடி மன்னான சுகேஷ் சந்திரசேகர் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் அவரின் சென்னையில் உள்ள கடற்கரையோர சொகுசு பங்களாவில் நடத்திய சோதனையில் 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் சிக்கின. பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் கார்கள் அவரிடம் சிக்கியது வியப்பை ஏற்படுத்தியது.

மேலும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த சுகேஷ் சந்திரசேகருடன் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை அவர் மறுத்து வந்தார். ஆனால் சுகேஷ் சந்திரசேகர்- ஜாக்குலின் நெருக்கமாக இருந்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கடந்த வாரம் அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த பொருட்களை பரிசாக அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பரிசில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்பிலான 4 பெர்சியன் பூனைகளும் அடங்கும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து நடிகை ஜாக்குலின் வெளிநாடு தப்பி விடாமல் தடுக்க அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. கடந்த 5-ந் தேதி துபாய் செல்ல முயன்ற அவர் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று அவர் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 8 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்றும் ஆஜராக உத்தரவிட்ட நிலையில் 2-வது நாளாக அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது சுகேஷ் சந்திர சேகருடன் உள்ள தொடர்பு, அவரிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்கள் பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்தனர். இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் கைது செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

Next Story