ரஜினியை நான் இயக்கியிருந்தால் அது ரூ.1000 கோடி வசூல் செய்திருக்கும்...! பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்!
ரஜினியை வைத்து தான் படம் இயக்க விரும்பவில்லை என்று போலி செய்தி பரவி வருவதாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.
சென்னை
'நேரம்' படம் மூலம் இயக்குனர் ஆனவர் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் புத்ரன். நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோரை வைத்து அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் படம் சூப்பர் ஹிட்டானது.
தற்போது நயன்தாரா, பிரித்விராஜ் ஆகியோரை வைத்து கோல்டு படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் ரஜினியை வைத்து தான் படம் இயக்க விரும்பவில்லை என்று போலி செய்தி பரவி வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:-
அப்போது 2015-ல் பிரேமம் ரிலீஸுக்குப் பிறகு, ஒரு இயக்குனராக நான் ரஜினிகாந்துடன் ஒரு படம் செய்ய விரும்பினேன். 99 சதவீத இயக்குனர்கள் அவரை வைத்து படம் பண்ண விரும்புவார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் படம் இயக்க விரும்பவில்லை என்று ஒரு நாள் ஆன்லைன் பக்கத்தில் ஒரு கட்டுரை வந்தது. அந்தச் செய்தி வேகமாக எங்கும் பரவியது. இந்தப் பதிவு குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார்.
பிரேமம் ரிலீஸுக்குப் பிறகு நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்று பதிலளித்தேன். அதை புரிந்து கொண்டு ரஜினி சாரிடம் இது குறித்து அவர் பேசினார். அப்போதுதான் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இப்போது 2021 ஆகஸ்ட் மாதம் கோல்ட் படத்தின் கதையை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஒருவரிடம் சொல்லும் போது...அவர் என்னிடம் சொல்கிறார்..அவர் ஒரு இயக்குனரிடம் பேசும் போது நான் ரஜினியுடன் படம் செய்ய விரும்பவில்லை என்று அவர் கூறினாராம். நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அதை காட்டவில்லை.
2015ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இந்தப் போலிச் செய்தி என்னைத் தொந்தரவு செய்வதாக உணர்கிறேன். நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், ரஜினிகாந்த் சாருடன் நான் விரும்பியபடி படம் எடுத்திருந்தால் அந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்வித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும், மேலும் அரசுக்கு வரியும் அதிகம் கிடைத்திருக்கும்.
அப்படி நடக்காததால் நஷ்டம் எனக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், பார்வையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும்தான். ***இந்தக் கட்டுரையைப் போட்டவரும், இந்தப் பொய்ச் செய்திக்குப் பின்னால் இருந்த மூளையும் ஒரு நாள் என் கண்முன் தோன்றுவார்கள். நீங்கள் அந்த நாளுக்காக காத்திருங்கள். ரஜினி சாருடன் என் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நீங்கள் எப்போதும் போல எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்." என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story