பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்!


பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்!
x
தினத்தந்தி 17 Feb 2022 4:28 PM IST (Updated: 17 Feb 2022 4:28 PM IST)
t-max-icont-min-icon

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்.

திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார். அவருக்கு வயது 61. இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவிற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும்  நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, பிருதிவிராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் வருத்தங்களை தெரிவித்துள்ளனர்.

மலையாள திரைப்பட உலகில் குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் கோட்டயம் பிரதீப். ஆரம்ப காலகட்டத்தில் மேடை நடிகராகவும் பின் தியேட்டர் கலைஞராகவும் நடித்து வந்த பிரதீப் பின்னர் சினிமாவில் நடித்து பிரபலமானார். 2001ம் ஆண்டு வெளியான ‘ஈ நாடு எனாலே வரே’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார்.

அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள  ‘ஆராட்டு’ படத்திலும் அவர் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

அவரது மறைவிற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள  இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளதாவது, “கோட்டயம் பிரதீப் ஒரு தனித்துவமான நடிகர். அவர் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைலில் சிறு கதாபாத்திரங்களையும் மக்கள் மனதில் தெள்ளத்தெளிவாக கொண்டு சேர்ப்பவர். அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”  என பதிவிட்டுள்ளார்.


Next Story