திரில்லர் படத்தை இயக்கும் நடிகை காவேரி
நடிகை காவேரி மலையாளத்தில் காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.
கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், நடிகை காவேரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில், ‘காசி’, ‘புன்னகைப் பூவே’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. தற்போதும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் காவேரி நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் சில படங்களை இயக்கியிருக்கும் சூரியகிரண் என்ற இயக்குனரை திருமணம் செய்திருந்தார். அவர்கள் சமீபத்தில் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் காவேரி மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சேத்தன்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சித்தி இட்னானி, சுகாசினி, ரோகித் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதல் போஸ்டர், சமீபத்தில் வெளியிடப்பட்டது. கதாநாயகன் சேத்தன், நிர்வாணமாக அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பெண் இயக்குனர் ஒருவரின் படத்தில், ஒரு கதாநாயகன் நிர்வாணமாக நடித்திருப்பது பற்றி, சினிமாத் துறையினர் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.
இந்தப் படம் எத்தனை மொழிகளில் வெளியாகும்?, படத்தின் பெயர் என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில் இனிவரும் நாட்களில் கிடைக்கலாம்.
Related Tags :
Next Story