அடுத்த படத்தில் ஹீரோவா ...! வில்லனா...! அஜித் கதாபாத்திரம் என்ன இயக்குனர் வெளியிட்ட தகவல்
61-வது படத்தில் அஜித் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் வினோத் வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை,
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வரவேற்பை பெற்றது. மீண்டும் இவர்கள் கூட்டணியில் வலிமை படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அதிகமான பைக் காட்சிகள், அம்மா சென்டிமெண்ட் தூக்கல் என கலவையான விமர்சனங்கள் படத்திற்கு எழுந்துள்ள போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான 3 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் பட வரிசையில் இணைந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இது அவருக்கு 61-வது படம். படத்தின் பூஜை மார்ச் மாதத்தில் போடப்படவுள்ளது. மேலும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க ஐதராபாத்தில் அரங்கு அமைத்து வருகின்றனர்.
இந்த படம் அதிரடி திகில் கதையம்சத்தில் தயாராவதாகவும், அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்றும் ஏற்கனவே தகவல்கள் பரவின. படத்தில் அவருக்கு நெகட்டிவ் வேடம் என்றும் கூறப்பட்டது. மேலும் படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என்ற இரண்டு கெட்டப்பிலும் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 61-வது படத்தில் அஜித் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் வினோத் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறும்போது அஜித்தின் 61-வது படத்தில் கதாநாயகனும் அவர்தான், வில்லனும் அவர்தான் என்றார். அப்படியென்றால் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா என்று கேட்டபோது அதுபற்றி இப்போது சொல்ல முடியாது என்று கூறினார்.
சமீபத்தில் அஜித் நீளமான தாடி வளர்த்து கோட் சூட் கண்ணாடி அணிந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இது 61-வது படத்துக்கான தோற்றமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது
கடந்த வாலி, வரலாறு மற்றும் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அஜித் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரங்கள் அவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பையே பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ஏகே61 படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story