பாலா இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக கிரித்தி ஷெட்டி
பாலா இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்ததாக சூர்யா நடிக்கும் புதிய படத்தை பாலா இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இவர்கள் கூட்டணியில் நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத் திறனாளியாக வருகிறார் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்புக்காக மதுரை அருகே பெரிய அரங்கு அமைத்து உள்ளனர். இதில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.
கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிப்பட்டு வந்த நிலையில், தற்போது சூர்யா ஜோடியாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவருக்கு முதல் தமிழ் படம்.
கிரித்தி ஷெட்டி தெலுங்கில் உப்பென்னா, பங்கர் ராஜூ, ஷியாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது லிங்குசாமி இயக்கும் வாரியர் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story