மீண்டும் சினிமாவுக்கு வருகிறார், கருணாஸ்
தற்போது கருணாஸ் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிய இருக்கிறேன் என்று கருணாஸ் கூறினார்.
2001-ம் ஆண்டில் பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர், கருணாஸ். ‘வில்லன்’, ‘பிதாமகன்’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’, ‘யாரடி நீ மோகினி’, ‘பொல்லாதவன்’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகு படங்களில் அவர் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது கருணாஸ் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். சூர்யா நடிப்பில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் உதவி இயக்குனராக அவர் பணிபுரிகிறார்.
இதுகுறித்து கருணாஸ் கூறியதாவது:-
"கிராமிய கானா பாடகராக இருந்த எனக்கு பெரிய அடையாளத்தை தந்தது சினிமாதான். தாய்மொழியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க வேண்டும் என்று நான் இப்போது முடிவெடுத்துள்ளேன். அதன்படி, வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிய இருக்கிறேன். கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு. என்னை தன்னுடன் இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு என்னுடைய நன்றி. ராமருக்கு ஒரு அணில் இருப்பதைப் போல் இந்த வெற்றி அணியில் வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக மாறப்போகிறேன்".
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story