டோலிவுட்டில் அதிகரிக்கும் நடிகைகளின் கவர்ச்சி ஆட்டம்
இந்திய சினிமாவில் முன் காலங்களில், ‘ஐட்டம் டான்ஸ்’ எனப்படும் கவர்ச்சி பாடலில் ஆடுவதற்காக என்று, தனியாக நடிகைகள் உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, மார்க்கெட் போன நடிகைகள் முதலில், கவர்ச்சி நடனம் ஆட வந்தனர்.
ஆனால் இப்போதெல்லாம் மார்க்கெட் இருக்கும் நடிகைகளே கூட, கவர்ச்சி நடனம் ஆட ஒத்துக் கொள்கின்றனர். அதிலும் டோலிவுட் எனப்படும் தெலுங்கு சினிமாவில், நடிகைகளின் கவர்ச்சி நடனத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஆயினும் அதில் மார்க்கெட் உள்ள நடிகைகளே நடிக்க காரணமாக இருப்பது, தெலுங்கு சினிமாவில் அவர்களுக்கு வழங்கப்படும் அதிக சம்பளம்.
கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்று பான் இந்தியா படமாக வெளியானது, ‘புஷ்பா’ திரைப்படம். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார், நடிகை சமந்தா. தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், இந்தியிலும் பல படங்களை கையில் வைத்திருக்கும் இவர், ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தினாலும், அந்தப் பாடலின் மூலமாக அவருக்கு கிடைத்த வெளிச்சம் இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஒரு பாடலுக்கு நடனமாடியதற்காக மட்டும், ஒரு படத்தில் நடித்தால் கிடைக்கும் அதே சம்பளத்தை சமந்தா பெற்றதாக பரபரப்பாக பேசப்பட்டது. அந்த தொகை ரூ.5 கோடி என்பது வாயைப் பிளக்க வைக்கும் செய்தி.
தற்போது ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்திலும் ஒரு கவர்ச்சி பாடல் இருக்கிறதாம். முதல் பாகத்தில் சமந்தா நடனமாடிய ‘ஊ.. சொல்றியா மாமா.. ஊ.. ஊ.. சொல்றீயா..’ என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்ததன் காரணமாக, 2-ம் பாகத்தின் கவர்ச்சி பாடலிலும் சமந்தாவையே ஆடுவதற்கு கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு சமந்தா மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘திஷா பதானி’யை, அந்த பாடலில் ஆட வைத்திருக்கிறார்களாம். புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் வந்த கவர்ச்சி பாடலில் ஆடுவதற்கு முதலில் பேசப்பட்டது, திஷா பதானிதான். ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சினையால் கிடைக்காமல் போன வாய்ப்பை, இரண்டாம் பாகத்தில் கைப்பற்றியிருக்கிறார்.
வருண் தேஜ் நடிப்பில் ஏப்ரல் 8-ந் தேதி வெளியாக இருக்கும் தெலுங்கு திரைப்படம், ‘ஹானி.’ பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘தபாங்-3’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த சாயி மஞ்சுரேக்கர், இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கியிருக்கும் இந்தப் படத்திலும் ஒரு கவர்ச்சி நடனப் பாடல் இருக்கிறது.
இந்தப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருப்பவர், தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘தமன்னா.’ இவர் இப்போதும் கூட தெலுங்கில் நான்கு படமும், இந்தியில் மூன்று படங்களையும் கைவசம் வைத்திருக்கும் பிசியான நடிகைதான். ஆனாலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு, அங்கு வழங்கப்படும் பெரிய தொகைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. தமன்னா, இதற்கு முன்பும் கூட ஒரு சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கின் மூத்த நடிகராகவும், முன்னணி நடிகராகவும் இருப்பவர் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆச்சார்யா’ திரைப்படம் ஏப்ரல் 29-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் என்று இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள்.
ஆனாலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக் கொடுத்திருக்கிறார், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘ரெஜினா கசான்ட்ரா.’ இவரும் தமிழ், தெலுங்கு என மொத்தம் 6 படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஒத்துக்கொண்டு, அதில் நடித்தும் முடித்திருக்கிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, “சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது என்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் நான் இதற்கு முன்பு கொடுத்த பேட்டிகளில் கூட சொல்லியிருக்கிறேன். ‘சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அவரது படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது என்றால் கூட மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்வேன்’ என்று.
அந்த வகையில்தான் ‘ஆர்ச்சார்யா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன். இனி எந்த படத்திலும், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு நான் தயாராக இல்லை. நான் ஒரு பாடலுக்கு ஆடிய முதலும், கடைசியுமான படம் ‘ஆச்சார்யா’ தான்” என்று பதிலளித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும், ‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் படம்’, ‘நட்புக்காக செய்து கொடுத்தேன்’ என்று பல கதைகள் கூறினாலும், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் என்பது, ஒரே இரவில் ரசிகர்களின் பார்வையை சுண்டியிழுக்கவும், அதே நேரம் ஒரு படத்திற்கான தொகையை, ஒரே பாடலில் பெறவும் வழி ஏற்படுத்திக் கொடுப்பதுதான், நடிகைகள் உடனடியாக ஒற்றை பாடலுக்கு ஆட சம்மதிப்பதற்கான அசைக்க முடியாத காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
Related Tags :
Next Story