மே 8-ல் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்..!
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் வருகிற மே 8-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 20-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில், தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியது.
இந்த நிலையில் மீண்டும் பதவிக்கு வந்துள்ள நாசர் தலைமையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் வருகிற மே 8-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story