மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா
நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா 7 வருடங்களுக்கு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
`வாலி', 'குஷி' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ‘நியூ', ‘அன்பே ஆருயிரே' போன்ற படங்களை இயக்கி நடித்தார். ‘கள்வனின் காதலி', ‘வியாபாரி', ‘நண்பன்', ‘இறைவி', ‘மெர்சல்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ‘ஸ்பைடர்' படத்தில் கொடூர வில்லனாகவும், ‘மாநாடு' படத்தில் புத்திசாலி வில்லனாகவும் நடித்து மிரட்டினார்.
எஸ்.ஜே.சூர்யா 2015-ம் ஆண்டு ‘இசை' என்ற படத்தை இயக்கி நடித்தார். அதன் பின்னர் அவர் படங்களை இயக்கவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
7 வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதாநாயகி மற்றும் இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தக் கதை ஒரு காரை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. இதற்காக ஜெர்மனியில் ஒரு புதிய காருக்கு ‘ஆர்டர்' கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு, இந்த புதிய படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் அவர் படத்தை இயக்க உள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story