கலைஞருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை - நடிகர் ஜீவா
கலைஞர் ஐயா கேரக்டரில் நடிக்க ஆசை. அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர். ஆனால் கலைஞரை வரலாற்றைப் படமாக எடுப்பதை விட வெப் சீரிஸாக எடுத்தால் சரியாக இருக்கும் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி முதல் இந்தாண்டு ஜூன் 3 வரை தமிழக அரசு சார்பிலும், தி.மு.க சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் வரிசையில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைகப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி கடந்த ஜூன் 1-ம் தேதி நடிகர் பிரகாஷ்ராஜால் திறக்கப்பட்டது. இதில் கலைஞரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான 'திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை' என 100-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
நடிகர் ஜீவா கலைஞரின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சியைப் பார்த்து ரசித்துள்ளார். அவருடன் பா.விஜய்யும் இருந்தார். பின்பு இருவரும் செய்தியாளர்களைச் சந்துத்து பேசினர். அப்போது ஜீவா பேசுகையில், "கலைஞரைப் பற்றி சினிமாவில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, சினிமாவைத் தாண்டி முதலமைச்சராக அவர் செய்ததைப் பார்க்க முடிந்தது. கிட்டதட்ட தி.மு.க, 40 வருடம் மக்களுக்காக பணி செய்திருக்கிறார். அதை ரொம்ப அழகாக இங்கு வைத்திருந்தனர். வெளிநாட்டில் மியூசியம் இருப்பது போல் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. குறிப்பாக ஹாலோகிராமில் கலைஞர் பேசியது சிறப்பாக இருந்தது. அதே போல் பா.விஜய் எழுத்தில் இருந்த குறும்படம் அழகாக இருந்தது. என்னை அழைத்த பா.விஜய்க்கு நன்றி" என்றார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக நிறைய நல்லது செய்வதாக பாராட்டி அப்பணி தொடரவேண்டும் எனத் தெரிவித்தார்.
பின்பு அவரிடம் கலைஞருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால், அதில் நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில் "நிச்சயமாக அந்தப் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் ஐயா கேரக்டரில் நடிக்க ஆசை. ஏனென்றால் சமீபத்தில் தெலுங்கில் அதே போன்ற கேரக்டர் பண்ணியிருந்தேன். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர். ஆனால் கலைஞரை வரலாற்றைப் படமாக எடுப்பதை விட வெப் சீரிஸாக எடுத்தால் சரியாக இருக்கும். அதைப் பா.விஜய்யே இயக்குவார் என்று நினைக்கிறேன்" என்றார். உடனே அருகில் அமர்ந்திருந்த பா.விஜய், "கண்டிப்பாக அது போல வாய்ப்பு கிடைத்தால் யாராலும் மறுக்க முடியாது. அது ஒரு வரலாற்றுப் பதிவு" என்றார்.
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா ஒரு பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.