படபிடிப்பில் நடிகர் நாசருக்கு காயம்; மருத்துவமனையில் அனுமதி
தெலுங்கான போலீஸ் அகாடமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் நாசருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
வில்லனாக தன்னுடைய கேரியரைத் துவங்கிய நாசர், கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் ரோல்கள் என அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் நாசர். தற்போது தாத்தா கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.
நடிப்பு, இயக்கம், திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், டப்பிங் கலைஞர் மற்றும் பாடகராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சங்க நிர்வாகியாகவும் இவர் செயல்பட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கே பாலசந்திரனின் கல்யாண அகதிகள் மூலம் அறிமுகமான இவர்,ரஜினியின் வேலைக்காரன் படத்தில் தான் இவர் வில்லனாக அவதாரம் எடுத்தார்.
யூகி சேதுவின் கவிதை பாட நேரமில்லை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நாசர், தொடர்ந்து அவதாரம் படத்தில் இயக்குநராகவும் மாறி, தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில், தெலுங்கான போலீஸ் அகாடமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் நாசருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகை சுகாசினி, மெஹ்ரின், சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் இந்தப் படப்பிடிப்பில் நாசர் கலந்துக் கொண்டுள்ளார்.
இதனிடையே நாசருக்கு ஏற்பட்ட விபத்துக் குறித்தும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்தும் அறிந்த பிரபலங்கள் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் நாசர் நலமாக உள்ளார் எனவும் படப்பிடிப்பின் போது சிறிய காயம் தான் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.