அளவுக்கு அதிகமாக மது அருந்தி காதலருடன் தாறுமாறாக காரில் சென்ற நடிகை
அளவுக்கு அதிகமாக மது அருந்தி கார் விபத்து ஏற்படுத்தியதாக நடிகை அஸ்வதி பாபு ( 26 ) மற்றும் அவரது காதலர் நவுபால் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மலையாள தொலைகாட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வதி பாபு. இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்கி கொள்வது உண்டு. முதன் முதலில் அவர் சிக்கியது ஒரு விபசார வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு, இவர் ஒரு அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில், பெண்களை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொழில் செய்ததாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அந்த புகாரின்பேரில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி, அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பதையும் உறுதி செய்தனர். பிறகு, நடிகை அஸ்வதியை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.
அதன் பிறகும்கூட பல சர்ச்சைகளில் இந்த நடிகை சிக்கி கொண்டே வந்தார். இப்போதும் போலீசில் சிக்கி உள்ளார். நேற்று இரவு அஸ்வது தனது காதலன் நவ்பலுடன் முழு போதையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றதாக் கூறப்படுகிறது. கொச்சி குசாட் சந்திப்பு சாலையில், தறிக்கட்டு சென்றதில், அந்த கார், பைக் மற்றும் சாலையோரம் தடுப்புகளில் உரசியபடி அதிவேகத்தில் சென்றுள்ளது.இதனால் சாலையில் சென்ற பொதுமக்களும், மற்ற வாகன ஓட்டிகளும் பதறிவிட்டனர்.
வேறு எங்கும் சென்று அந்த கார் விபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக, வாகன ஓட்டிகளே போலீசுக்கு தகவல் தந்துவிட்டு, பின்னாடியே காரை விரட்டிக் கொண்டு சென்றார்கள். நடுரோட்டில் நடந்த இந்த சேஸிங்கை பார்த்தால், சினிமாவில் பார்ப்பதை போலவே இருந்தது. அடுத்த கொஞ்ச நேரத்தில், அந்த காரை விரட்டி சென்ற வாகன ஓட்டிகள், நடிகையின் காரை முந்தி சென்று இடைமறித்துவிட்டனர். வாகன ஓட்டிகள் காரை வழிமறித்து விட்டதால், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, காரை அங்குள்ள ஒரு பகுதியில் கீழே இறக்கினார். ஆனால், கீழே கிடந்த பெரிய பெரிய கல் குத்தியதில், முன் பக்க டயர் வெடித்துவிட்டது.
அதனால், அதற்கு மேல் காரை நகர்த்தி செல்ல முடியாமல், அங்கேயே வசமாக சிக்கிவிட்டார் அஸ்வதி. அதற்குள் வாகன ஓட்டிகள் விரைந்து வந்து, காரை மடக்கிப்பிடித்தனர். காருக்குள் நடிகை இருப்பதை அறிந்ததுமே, கூட்டம் கூடிவிட்டது. நடிகை அஸ்வதியையும், அவரது காதலனையும் சுற்றி சுற்றி வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டனர் ஒருசிலர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அஸ்வதி, காருக்குள் இருந்து கீழே இறங்கி வந்து, வீடியோ எடுத்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனிடையே போலீசாருக்கு தகவல் சென்றிருப்பதை அறிந்ததும், அவர்கள் வருவதற்குள் அங்கிருந்து தப்பித்து செல்வதற்காக இருவரும் வேகமாக ஓட ஆரம்பித்தனர். அந்த பகுதியில் இருந்த ஒரு கடைக்குள், ஏதோ பொருட்களை வாங்க வந்த வாடிக்கையாளர் போல பதுங்கி கொண்டுவிட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே திருக்காக்கரை போலீசார் வந்துவிட்டனர். இருவரையும் கடைக்குள் நுழைந்து மடக்கிப்பிடித்து அழைத்து சென்றனர். விசாரணையில் 2 பேருமே போதையில் இருந்தது தெரியவந்தது. எனவே, இருவருக்கும் பரிசோதனை நடத்தி அதை உறுதிப்படுத்தியது போலீஸ்.