பிரபல டைரக்டர் சஜித்கான் மீது மற்றொரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு


பிரபல டைரக்டர் சஜித்கான் மீது மற்றொரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு
x

பிரபல டைரக்டர் சஜித்கான் மீது பிரபல போஜ்புரி நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,


நடிகைகள் பலர் மீ டூ இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். இதில் பிரபல இந்தி டைரக்டர் சஜித்கானும் சிக்கினார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகார் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். மீ டூ புகாரில் சிக்கிய சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர்.

இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்தார். இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சஜித்கான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காமகொடூரரை பிக்பாஸ் போட்டியாளராக சல்மான்கான் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்று விளாசி உள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியான சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு எழுதி உள்ள கடிதத்தில், டைரக்டர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து உள்ளனர். அவர் மோசமானவர் என்பது இதன் மூலம் தெரிகிறது.

அப்படிப்பட்டவரை சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க செய்து இருப்பது தவறானது. அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், டைரக்டர் சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க கோரி மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு கடிதம் எழுதியதில் இருந்து சமூக ஊடகம் வழியே தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன என சுவாதி மலிவால் தெரிவித்து உள்ளார்.

டைரக்டர் சஜித்கானுக்கு எதிராக சலோனி சோப்ரா, ஷெர்லின் சோப்ரா, ஆகானா கும்ரா மற்றும் மந்தனா கரிமி உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர். சமீபத்தில் கனிஷ்கா சோனி சஜித்கானுடனான தனது அனுபவம் பற்றி வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், சஜித்கான் மீது பிரபல போஜ்புரி நடிகை ராணி சாட்டர்ஜி அதிரடி பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறும்போது, ஹிம்மத்வாலா படப்பிடிப்பின்போது, சஜித்கான் அவராகவே என்னை கூப்பிட்டு என்னுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என கூறினார்.

அவர் பின்னர், எனது வீட்டுக்கு வா. சந்தித்து பேச வேண்டும் என கூறினார். வரும்போது, மேலாளர் அல்லது பி.ஆர். என யாரும் இல்லாமல் தனியாக வரவேண்டும் என்றும் கூறினார். இது வழக்கம்போல் நடைபெறும் சந்திப்பு என்றும் கூறினார்.

பாலிவுட்டில் ஒரு பெரிய டைரக்டர் என்ற அடிப்படையில் அவர் கூறியபடி நடந்து கொண்டேன். ஜுகுவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டில் அவர் தனியாகவே காணப்பட்டார். என்னிடம், தோக்கா தோக்கா குத்து பாட்டுக்கு என்னை நடனம் ஆட வைக்கிறேன் என முதலில் கூறினார்.

அதற்காக குட்டை லெகங்கா அணிய வேண்டும் என என்னிடம் கூறினார். பின்பு என்னுடைய கால்களை காட்டும்படி கூறினார். நான் கால் வரை ஸ்கர்ட் அணிந்து இருந்தேன். அதனை முழங்கால்கள் வரை மேலே இழுத்து விட்டேன்.

அவர் திடீரென என்னிடம் மார்பளவு என்ன? என கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். கூச்சப்பட வேண்டாம். காதலர் உண்டா? அவருடன் பாலியல் உறவு வைத்ததுண்டா? என அடுத்தடுத்து கேட்டார். அச்சமடைந்து போன நான், இந்த உரையாடலெல்லாம் என்ன வகையிலானது? என கேட்டேன்.

அவர் விரும்பியவற்றை நான் செய்வேன் என அவர் நினைத்திருக்கிறார். ஆனால், உடனே கிளம்பி விட்டேன். தகாத முறையில் அவர் என்னை தொட முயன்றார் என ராணி கூறியுள்ளார்.

இதனை வெளியே கூறினால், தனக்கு தடை போடப்படும் என ராணி பயந்து உள்ளார். பின்னர், மீ டூ விவகாரத்தில் பெண்கள் பலர் பேசிய தைரியத்தில் அவரும் இந்த விவகாரம் பற்றி பேசியுள்ளார்.


Next Story