கட்டிவைத்து உதை, மட்டையால் அடி, கணவரை கொடுமை செய்யும் ஆலியா பட் ; கொந்தளிக்கும் ரசிகர்கள்
நடிகை ஆம்பர் ஹெர்ட்டின் இந்திய வெர்ஷன் நடிகை ஆலியா பட் அவரது படத்தை புறக்கணியுங்கள் என அவருக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி உள்ளது.
மும்பை
இப்போது பல திரைப்படங்கள் ரசிகர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. நடிகர், நடிகைகள் தவறு செய்தால் அந்த படத்தை புறக்கணிக்க கோரி ஹேஷ் டேக் டிரெண்டாகிறது. தற்போது அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை புறக்கணிப்பதாக பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ஆலியா பட் நடித்த 'டார்லிங்ஸ்' படமும் சிக்கலில் மாட்டி உள்ளது.இந்த படத்தில் ஆண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. #BoycottDarlings #BoycottAliaBhatt என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி உள்ளது.இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட்டை டிரோல் செய்தும் கண்டபடி விமர்சனம் வருகின்றனர்.
ஆலியா பட் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி டார்லிங்ஸ் படம் வெளியாக உள்ளது.
பெண் இயக்குநர் ஜஸ்மீத் கே ரீன் இயக்கத்தில் ஆலியா பட் இதில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரைலர் பாலிவுட் ரசிகர்களை குறிப்பாக ஆண்களை பெரும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது. நடிகை ஆலியா பட் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஆலியா பட்டின் டார்லிங்ஸ் படத்தில் கணவருக்கு எலி மருந்து கொடுப்பது, கட்டி வைத்து உதைப்பது , நான் இனிமேல் பீல்டிங் பண்ண மாட்டேன், பேட்டிங் ஆடப் போறேன் என மட்டையால் தலையில் அடிப்பது உள்ளிட்ட குடும்ப வன்முறை செய்யும் மனைவி கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்துள்ளார். இதனால் அவர் ஆண்களின் வெருப்புக்கு உள்ளாகி உள்ளார்.
ஜானி டெப்புக்கு குடும்ப வன்முறை கொடுத்த ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட்டின் இந்திய வெர்ஷன் தான் இந்த ஆலியா பட் என ஆலியா பட் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள டார்லிங்ஸ் திரைப்படத்தை புறக்கணிக்க பாலிவுட் ரசிகர்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர்.