வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக மணிரத்னம் மீது ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்
மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்
சென்னை,
கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில் வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறிஇயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்குஉத்தரவிடக் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.