எம்.ஜி.ஆர். நடித்திருக்க வேண்டிய படம் 'பொன்னியின் செல்வன்' -இயக்குனர் மணிரத்னம்
இன்று பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
சென்னை,
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.
இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் முதல் பாகமான "பொன்னியின் செல்வன்-1" வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ..தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்தினம் பேசியதாவது ;
கல்கிக்கு என்னுடைய முதல் நன்றி . இந்த திரைப்படம் (பொன்னியின் செல்வன்) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய படம் .நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடித்திற்க வேண்டிய படம்.எதோ ஒரு காரணத்தால் நின்று விட்டது.இன்றைக்கு தான் புரிந்தது எங்களுக்காக விட்டு வைத்து போயிருக்கிறார் என்று.இந்த திரைப்படத்தை எடுக்க நான் 3 முறை முயற்சி செய்தேன்.என கூறினார்.