காந்தியும், அம்பேத்கரும் விவாதிப்பதைப் பார்க்க ஆசை: ஜான்வி கபூர்


காந்தியும், அம்பேத்கரும் விவாதிப்பதைப் பார்க்க ஆசை: ஜான்வி கபூர்
x

காந்தி, அம்பேத்கர் மற்றும் சாதி பாகுபாடு பற்றி நேர்காணல் ஒன்றில் நடிகை ஜான்வி கபூர் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இவர் நடித்து முடித்துள்ள மிஸ்டர் மிஸ்ஸஸ் மஹி திரைப்படம் வரும் மே.31 அன்று வெளியாகிறது. இதற்கான, புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜான்வியிடம், "வரலாற்றில் எந்தக் காலகட்டத்திற்குச் செல்ல விருப்பப்படுகிறீர்கள்?" என நெறியாளர் கேட்டார். இதற்கு ஜான்வி, "மகாத்மா காந்திக்கும் சட்டமேதை அம்பேத்கருக்கும் இடையிலிருந்த சாதி குறித்த பார்வைகளையும், கருத்துகளையும், விவாதங்களையும் காண ஆசைப்படுகிறேன். இருவரும் இந்திய சமூகத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்தவர்கள். காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். சாதி குறித்து இருவருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன. அம்பேத்கர் ஆரம்பம் முதலே தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். காந்தியைப் பொறுத்தவரை அவரது பார்வை பரிணமித்துக்கொண்டே இருந்தது. சமூகத்திலுள்ள சாதிப் பிரச்னைகளை மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. என் பள்ளியிலும் வீட்டிலும் சாதி குறித்த உரையாடல்கள் நிகழவில்லை" எனக் கூறினார்.

ஜான்வி கபூரின் இந்தக் கருத்துக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், 'அழகும் அறிவும் உள்ள நடிகை' என டிரெண்ட் ஆகியுள்ளார் ஜான்வி


Next Story