ஓவியராக மாறிய நடிகை ஷாம்லி.. குவியும் வாழ்த்துக்கள்
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி படத்தில் நாயகியாக நடித்துவர் ஷாம்லி. நடிகை ஷாம்லி ஓவிய கலைஞராக மாறி கண்காட்சிகள் நடத்தி வருகிறார்.
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியானவர் ஷாம்லி. இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை ஷாலினியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஷாம்லி ஓவிய கலைஞராக மாறி கண்காட்சிகள் நடத்தி வருகிறார். ஓவியங்களில் ஷாம்லி பயன்படுத்தும் கோடுகள், வளைவுகள், வண்ணங்கள் வரையறைகள் தனித்துவமாகவும், ஓவியங்களில் இடம்பெறும் பெண்கள் தங்களின் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்துவது போல் உள்ளன என்றும் பலர் பாரட்டி உள்ளனர்.
ஓவியரானது குறித்து ஷாம்லி கூறும்போது, "நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 60 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். கதாநாயகியாகவும் வந்தேன். ஓவியக்கலை மீது ஏற்பட்டுள்ள ஈடுபாடு காரணமாக ஓவிய துறையில் திறமை பெற்றவர்கள் மூலம் ஓவியம் வரைய கற்றேன். அமெரிக்கா சென்றும் ஓவியம் வரைய பயின்றேன். பெங்களூர், சென்னை ஓவிய கண்காட்சியில் ஓவியங்களை காட்சிப்படுத்தினேன். 300 கலைஞர்களுக்கு மேல் பங்கேற்ற துபாயில் உள்ள சர்வதேச ஓவிய கலைக்கூடத்திலும் எனது ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்தேன். அடுத்து சென்னையில் தனியாக ஓவிய கண்காட்சி நடத்த இருக்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து சிந்திக்கவில்லை'' என்றார்.