படப்பிடிப்பை நிறைவு செய்த அட்டக்கத்தி தினேஷ் படக்குழு
இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி வரும் திரைப்படம் தண்டகாரண்யம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.
இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.
தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரித்துள்ளார். தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் அதியன் ஆதிரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.