தில் ராஜு பாணியில் படத்தை புரொமோஷன் செய்த சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி தற்போது ‘போலா ஷங்கர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015-ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு 'போலா ஷங்கர்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி, 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, எமோஷன் வேணுமா எமோஷன் இருக்கு' என தயாரிப்பாளர் தில் ராஜு பாணியில் படத்தை புரொமோஷன் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'வாரிசு' திரைப்படத்தின் புரொமோஷனின் போது தயாரிப்பாளர் தில் ராஜு 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு' என இப்படத்தை புரொமோஷன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.