வலியுடன் போராடி விரைவில் களத்தில் இறங்குவேன் -பிரித்விராஜ் உறுதி
நடிகர் பிரித்விராஜ் 'விலயாத் புத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் இயக்குனர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் 'விலயாத் புத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, மறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படம் சந்தனக் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் பிரித்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து அவர் உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நடிகர் பிரித்விராஜ் இந்த அறுவை சிகிச்சை குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'விலயாத் புத்தா' படத்தின் சண்டைக்காட்சியின் போது காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி வருகிறேன். இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபி தான். அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். மேலும், முழுமையாக குணமடையவும் விரைவில் செயலில் இறங்கவும் வலியுடன் போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். அன்பு மற்றும் அக்கறையை தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.