தலைவர் 170: உண்மை சம்பவத்தில் நடிக்கும் நடிகர் ரஜினி?
ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், போலி என்கவுண்டர்களுக்கு எதிரான கதைக்களத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.