மீண்டும் தனுஷுடன் இணைந்த மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.