விரைவில் "வேட்டையாடு விளையாடு-2".. இயக்குனர் கவுதம் மேனன்
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தின் இரண்டாம் பாகம் துவங்க திட்டமிட்டுள்ளதாக கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.
சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது. நேற்று வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் கமலிடம் கூறியுள்ளேன், அவருக்குப் பிடித்திருந்தது. துருவ நட்சத்திரம் வெளியீட்டுக்குப் பின் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் பணிகளை துவங்க திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.