'மாமன்னன்' படத்தின் பாடல் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 'மாமன்னன்' படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'மாமன்னன்' படத்தில் வடிவேலு பாடியுள்ள பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு இப்பாடலை பாடியுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.