'வெப்' ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக்- நட்டி நட்ராஜ்


வெப் ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக்- நட்டி நட்ராஜ்
x

இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்'. இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி 'வெப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் நட்டி நட்ராஜ் பேசும்போது, எங்களுக்கு சம்பளத்துடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் 'வெப்' படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர்.

இயக்குனர் ஹாரூண் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்துவிட்டது. இப்போதைய சூழலில் பலபேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப் என்று கூறினார்.

மேலும், இயக்குனர் ஹாரூண் பேசும்போது, பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலதான் தயாரிப்பாளர்களும் கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100 சதவீதம் எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி" என்றார்.


Next Story