தில் ராஜூ பாணியை பின்பற்றிய வெங்கட் பிரபு.. கவனம் ஈர்க்கும் வீடியோ


தில் ராஜூ பாணியை பின்பற்றிய வெங்கட் பிரபு.. கவனம் ஈர்க்கும் வீடியோ
x

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படம் வருகிற 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு, 'இந்த படத்தில் ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்சன் உந்தி, ஃபேமிலி செண்டிமெண்ட் வேணுமா ஃபேமிலி செண்டிமெண்ட் உந்தி ,என்ன வேணும் எல்லாம் உந்தி, இந்த படத்துல மாஸ் வேணுமா மாஸ் உந்தி என தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை கலந்து பேசினார். இதனை கேட்ட நடிகர் நாக சைதன்யா மிகுந்த சிரிப்புடன் கைதட்டி வரவேற்றார்.

இதற்கு முன்பு 'வாரிசு' படத்தின் புரோமோஷன் விழாவில் தில் ராஜு 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, பைட் வேணுமா பைட் இருக்கு' என்று பேசிய பாணியில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசிய வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


Next Story