சென்னை ஜெ.ஜெ.நகரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது கடன் சுமை அதிகமானதால் கொள்ளையடிக்க முயற்சி


சென்னை ஜெ.ஜெ.நகரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது கடன் சுமை அதிகமானதால் கொள்ளையடிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Nov 2019 4:45 AM IST (Updated: 19 Nov 2019 5:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஜெ.ஜெ.நகரில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடன் சுமை அதிகமானதால் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

பூந்தமல்லி,

சென்னை ஜெ.ஜெ. நகர், 10-வது பிளாக்கில் தனியார் வங்கியும், அதன் அருகேயே ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.

அப்போது மும்பையில் உள்ள அந்த வங்கியின் தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் அபாய மணி ஒலித்தது. இதனால் உஷாரான வங்கி ஊழியர்கள், உடனடியாக ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கையும் களவுமாக பிடித்தனர்

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர், கையில் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதை கண்டனர்.

அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து கைது செய்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர், தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த சிலம்பரசன்(வயது 30) என்பது தெரிந்தது.

கடன் சுமையால் அவதி

டிப்ளமோ முடித்துள்ள சிலம்பரசன், கோவை மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். ஆனால் போதிய சம்பளம் கிடைக்காததால் வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து நெற்குன்றத்தில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார்.

ஆனால் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் தனது திருமணத்துக்கும் கடன் வாங்கி செலவு செய்தார். இதனால் கடன் சுமை அதிகமானதால் அவதிக்குள்ளானார். வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்று தெரியாமல் தவித்து வந்த நிலையில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டது கைதான சிலம்பரசனிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story