கழிவுகளை விளைநிலங்களில் ெகாட்டி தீவைப்பதால் பாதிப்பு
கழிவுகளை விளைநிலங்களில் ெகாட்டி தீவைப்பதால் பாதிப்பு
தளி
விளை நிலத்தில் கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தீ வைத்து எரிப்பு
உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறு, பருவ மழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு தென்னை, வாழை, கரும்பு, காய்கறி, கீரை, சப்போட்டா, மாதுளை, கொய்யா உள்ளிட்ட பழங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு, இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளால் விவசாயத் தொழில் நலிவடைந்து வருகிறது. இந்த சூழலில் சின்னவாளவாடி பகுதியில் தனியார் நிலத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பல்வேறு தரப்பட்ட கழிவுகளால் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விளை நிலங்களுக்கு மத்தியில் கழிவுகளை கொட்டி ஒரு சிலர் தீ வைத்தனர். அதில் இருந்து கிளம்பிய புகை மற்றும் துர்நாற்றம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 2-வது நாளாக பரவி வருகிறது. இதனால் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், சுற்றுப்புற தோட்டத்துச் சாலையில் குடியிருந்து வரக்கூடிய பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுதிணறல் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு உள்ளது.
நடவடிக்கை
ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் அவதிப்பட்டு வருகிறது. இடைவிடாது வீசி வருகின்ற புகை மூட்டத்தால் விவசாயத்திற்கு உதவிகரமாக உள்ள பூச்சி இனங்கள், மண் காப்பான்களான நுண்ணுயிரிகள் மூச்சு திணறலால் மடியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் புகையின் தாக்குதலால் வாடி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சின்னவாளவாடி பகுதியில் ஆய்வு செய்து தனியார் நிலத்தில் பல்வேறு தரப்பட்ட கழிவுகளைக் கொட்டி தீ வைத்து எரித்து காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-------------
2 காலம்
விவசாய நிலத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதை காணலாம்.