படிப்பை முடித்து காதலியை மணக்க விரும்பும் கதாநாயகன் காதல் தோல்வி, மதுவுக்கு அடிமை - ஆதித்ய வர்மா


படிப்பை முடித்து காதலியை மணக்க விரும்பும் கதாநாயகன் காதல் தோல்வி, மதுவுக்கு அடிமை - ஆதித்ய வர்மா
x
தினத்தந்தி 10 Jan 2020 8:48 AM GMT (Updated: 10 Jan 2020 8:48 AM GMT)

கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் விமர்சனம்

விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் வெளியான அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழ் பதிப்பாக வந்துள்ளது. மருத்துவ கல்லூரியில் படிக்கும் கோபக்கார இளைஞரான துருவ் விக்ரம் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக சேரும் பனிதா சந்து மீது காதல் வயப்படுகிறார். முதலில் அதை நிராகரிக்கும் பனிதா பின்னர் ஏற்கிறார்.

படிப்பை முடித்து காதலியை மணக்க விரும்பும்போது பனிதாவின் தந்தை சாதியை காரணம் காட்டி எதிர்க்கிறார். இன்னொருவருக்கு பனிதாவை திருமணம் செய்து வைக்கவும் முடிவு எடுக்கிறார். காதலியை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தும் அவர் வராததால் தோல்வியில் மதுவுக்கு அடிமையாகிறார்.

போதையில் ஆபரேஷன் தியேட்டருக்கு சென்றதால் டாக்டர் தொழில் செய்யவும் மருத்துவ கவுன்சில் தடை விதிக்கிறது. இதனால் ஊரை விட்டே செல்கிறார். காதலியோடு சேர்ந்தாரா? என்பது மீதி கதை.

விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம். ஆதித்ய வர்மா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். இது அவருக்கு முதல் படம் என்று சொல்ல முடியாத வகையில் அபாரமான நடிப்பால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். பனிதா சந்துவை தீவிரமாக காதலிப்பது, குடும்பத்தினுடன் கோபப்படுவது பிறகு அவர்கள் பாசத்தை நினைத்து உருகுவது, கர்ப்பமான காதலியை பார்த்து கலங்குவது என்று ஒவ்வொரு காட்சியிலும் உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் பட உலகுக்கு நம்பிக்கையான வரவாக தன்னை நிலைநிறுத்தி உள்ளார்.

அமைதியாக வரும் பனிதா சந்து காதலில் விழுந்த பின் நெருக்கம் காட்டுகிறார். கிளைமாக்சில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். துருவின் நண்பனாக வரும் அன்புதாஸ் சிரிக்க வைக்கிறார். பிரியா ஆனந்த் சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார். துருவின் தந்தையாக வரும் ராஜா, பாட்டியாக வரும் லீலா சாம்சன், வக்கீலாக வரும் பகவதி பெருமாள் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு.

முத்தகாட்சிகள் நெளிய வைக்கின்றன. கல்லூரி காதலை மையமாக வைத்து திரைக்கதையை கலகலப்பும் விறுவிறுப்புமாக சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் கிரிசாயா. ரவி கே. சந்திரன் கேமரா காட்சியோடு ஒன்ற வைத்துள்ளது. ரதனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

Next Story