பிரபல எழுத்தாளரின் மரணம் படம் அழியாத கோலங்கள்-2


பிரபல எழுத்தாளரின் மரணம் படம் அழியாத கோலங்கள்-2
x
தினத்தந்தி 10 Jan 2020 2:44 PM IST (Updated: 10 Jan 2020 2:44 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி நடித்துள்ள ’அழியாத கோலங்கள் 2’ படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  பிரகாஷ்ராஜ், ஒரு பிரபல எழுத்தாளர். அவர் எழுதிய நூலுக்கு, ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்கிறது. டெல்லி சென்று விருதை பெற்றுக்கொண்ட அவர், அவசரமாக சென்னை திரும்புகிறார். நேராக வீட்டுக்கு போகாமல், அவருடைய கல்லூரி தோழியும், காதலியுமான அர்ச்சனா வீட்டுக்கு வருகிறார்.

அவரை திடீரென்று பார்த்த அர்ச்சனாவுக்கு இன்ப அதிர்ச்சி. இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்து கொள்கிறார்கள். அப்போது, மாத்திரை மருந்துகளால் தன் வாழ்க்கை ஓடுகிறது என்று பிரகாஷ்ராஜ் சொல்கிறார். அவருக்காக அர்ச்சனா விருந்து தயாரித்து பரிமாறுகிறார். பிரகாஷ்ராஜ் சாப்பிட்டு விட்டு, இரவு அங்கேயே தங்குகிறார்.

நள்ளிரவில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சரிகிறார். டாக்டரை அழைத்து வருவதற்குள் அவர் மரணம் அடைகிறார். அவருடைய மரணம், சர்ச்சையாகிறது. அக்கம்பக்கத்து குடியிருப்புவாசிகள் போலீசை வரவழைக்கிறார்கள். போலீஸ் அதிகாரி நாசர் சிரித்துக்கொண்டே விசாரணை என்ற பெயரில், அர்ச்சனாவை மிரட்டுகிறார். பிரகாஷ்ராஜ்-அர்ச்சனாவின் நட்பை கொச்சைப்படுத்துவது போல் பேசுகிறார். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். “இது ஒரு கொலை” என்று அரசியல்வாதிகள் இன்னொரு பக்கம் பயமுறுத்துகிறார்கள். ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், பிரகாஷ்ராஜின் மனைவி ரேவதி அங்கே வருகிறார். அர்ச்சனாவை சந்திக்கிறார். அவர்கள் இருவரின் சந்திப்பு என்ன விளைவை ஏற்படுத்துகிறது? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

பிரகாஷ்ராஜ், ஒரு எழுத்தாளரை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், நடை-உடை-பாவனைகளாலும் பிரபல எழுத்தாளராக வாழ்ந்து இருக்கிறார். பிரகாஷ்ராஜை திடீர் என்று பார்த்த அதிர்ச்சியை வெளிப்படுத்துவதில் இருந்து, ஒரே மகளின் சந்தேகங்களை எதிர்கொள்வது, ரேவதியின் அணுகுமுறையால் வியந்து போவது வரை-ஒட்டு மொத்த படத்தையும் ‘ஊர்வசி’ அர்ச்சனா சுமந்து இருக்கிறார். ஆரம்ப காட்சியிலும், இறுதி காட்சியிலும் ரேவதி ஒரு நல்ல மனைவியாக மனதில் ஆழமாக பதிகிறார்.

நாசர் நல்ல போலீஸ் அதிகாரியா, கெட்ட போலீஸ் அதிகாரியா? என்று கணிக்க முடியாத அளவுக்கு முரண்பட்ட கதாபாத்திரமாக தெரிகிறார். விஜய் கிருஷ்ணராஜ் அரசியல்வாதியாகவும், மோகன்ராம் டாக்டராகவும் வருகிறார்கள். சித்தார்த்தின் பின்னணி இசை, படம் பார்ப்பவர்களை கதையோடு கட்டிப்போடுகிறது. கே.நாயரின் ஒளிப்பதிவு, காட்சிகளை மனதில் பதிய வைக்கிறது.

எம்.ஆர்.பாரதி டைரக்டு செய்திருக்கிறார். ஒரு உணர்வுப்பூர்வமான கதையை உறுத்தாமல், நெகிழவைக்கும் விதமாக சொல்லியிருக்கிறார். பிரகாஷ்ராஜ்-ரேவதி தொடர்பான தொடக்க காட்சி, எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அர்ச்சனா-ரேவதி தொடர்பான இறுதி காட்சி, எதிர்பாராத திருப்பம். ஆரம்ப காட்சிகளில் வசனத்தை குறைத்து இருக்கலாம்.

பிரகாஷ்ராஜ்-அர்ச்சனாவின் நட்பை கவித்துவமாக காட்சிப்படுத்தியிருப்பது, சிறப்பு.

Next Story