6 பேர்களின் மர்ம சாவு பற்றி விசாரிக்கும்போது பயமுறுத்துகிற சில சம்பவங்கள் படம் இருட்டு விமர்சனம்


6 பேர்களின் மர்ம சாவு பற்றி விசாரிக்கும்போது பயமுறுத்துகிற சில சம்பவங்கள் படம் இருட்டு விமர்சனம்
x
தினத்தந்தி 10 Jan 2020 10:31 AM GMT (Updated: 10 Jan 2020 10:31 AM GMT)

வி.சி.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `இருட்டு' படத்தின் சினிமா விமர்சனம்.

‘அரண்மனை’ படங்கள் மூலம் பேய்களை காட்டி மிரட்டிய சுந்தர் சி.யும், சில குற்ற பின்னணி கதைகளை படமாக்கி பயமுறுத்திய டைரக்டர் வி.இசட் துரையும் சேர்ந்து பணிபுரிந்த படம். படத்தின் கதைக்கு 100 சதவீதம் பொருந்துகிறது ‘டைட்டில்.’

அது, ஒரு மலை கிராமம். அந்த கிராமத்தில், 6 பேர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதுபற்றி விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

அவருக்கு பதில் புதிய இன்ஸ்பெக்டர் சுந்தர் சி. தனது இளம் மனைவி சாக்‌ஷி சவுத்ரி மற்றும் ஒரே மகளுடன் அந்த ஊருக்கு போகிறார். வழியில் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு இடத்தில் அமர்ந்து அவர்கள் சாப்பிட முயன்றபோது, சாப்பாட்டின் மீது ஒரு காகம் செத்து விழுகிறது. அபசகுனம் நிகழ்ந்ததை பார்த்து சாக்‌ஷி சவுத்ரி பயப்படுகிறார். அவரை தேற்றி ஊருக்குள் வந்து புதிய இன்ஸ்பெக்டராக சுந்தர் சி. பொறுப்பு ஏற்கிறார்.

6 பேர்களின் மர்ம சாவு பற்றி சுந்தர் சி. விசாரிக்கும்போது, அவரை பயமுறுத்துகிற மாதிரி, சில சம்பவங்கள் நடக்கின்றன. மலைக்கு அந்த பக்கம் ஒரு மர்ம ஆசாமி தனியாக வசித்து வருவதை கேள்விப்பட்டு அவரை பார்க்க சுந்தர் சி. செல்கிறார். அப்போது அவரை வெள்ளையாக ஒரு பெண்ணின் உருவம் பின் தொடர்கிறது. அவர் வசிக்கும் வீட்டில், சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. காகங்கள் நூற்றுக்கணக் கில் பறந்து வந்து வீட்டுக்குள் வர முயற்சிக்கின்றன. சுந்தர் சி.யின் ஒரே மகள் விசித்ர நோயினால் பாதிக்கப்படுகிறாள்.

இந்த மிரட்டல்களுக்கெல்லாம் சுந்தர் சி. பயப்படாமல், மர்மங்கள் மற்றும் அமானுஷ்யங்கள் பற்றி தொடர்ந்து விசாரிக்கும்போது, அவருக்கு சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வருகின்றன. மனித பிறவியாகவும் இல்லாமல், பேய்களாகவும் இல்லாமல், ஒரு கொடூரமான அமானுஷ்யம் இருப்பது தெரியவருகிறது. அதனிடம் இருந்து சுந்தர் சி. தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார், அதை எப்படி அழிக்கிறார்? என்பது ‘கிளைமாக்ஸ்.’

சுந்தர் சி. இதற்கு முன்பு சில படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் தனித்து தெரிகிறார். ஒரு இயல்பான போலீஸ் அதிகாரியை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறார். துப்பறியும் காட்சிகளில் அவர் துணிந்து செயல்படுவது, நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. மனைவி மீதான காதல், குற்றவாளிகளுடன் மோதல் காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

சாக்‌ஷி சவுத்ரி, கிளுகிளுப்பூட்டுவதுடன் சரி. சாய் தன்சிகா ஆஜரானபின், கதையில் பெரிய திருப்பம். கண்களால் மிரட்டுகிறார். அதிக பயமூட்டுகிறார். வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகிய இருவரும் வரும் காட்சிகளில் கலகலப்பு.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பின்னணி இசையில், கலக்கி இருக்கிறார். கேமரா யார்? என்று கேட்க தூண்டுகிறது, கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு. ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறார், டைரக்டர் வி.இசட்துரை. பேயாகவும் இல்லாமல், மனித பிறவியாகவும் இல்லாமல், ஒரு உயிரினம் இருக்கிறது என்று புதுசாக திகில் ஏற்படுத்தி இருக்கிறார். பாம்பு, மீன், நாய், கரையான் ஆகியவைகளின் பயங்கரத்தை மிக சரியாக திரைக்கதைக்குள் புகுத்தி இருப்பது, புத்திசாலித்தனம். படம், இடைவேளை வரை மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்குப்பின், அதிவேகமாக பயணிக்கிறது, திரைக்கதை. 2 மணி நேரமும் பனி சூழ்ந்த ஒரு மலைப்பிரதேசத்தில் வாழ்ந்த திருப்தி.

Next Story