சாமான்ய இளைஞர்களின் கால்பந்து விளையாட்டு கனவை நனவாக்கும் கதாநாயகன் படம் ஜடா - விமர்சனம்


சாமான்ய இளைஞர்களின் கால்பந்து விளையாட்டு கனவை நனவாக்கும் கதாநாயகன் படம் ஜடா - விமர்சனம்
x
தினத்தந்தி 10 Jan 2020 10:57 AM GMT (Updated: 10 Jan 2020 10:57 AM GMT)

போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்க கதிர் நாயகனாக நடிக்கும் ஜடா படத்தின் சினிமா விமர்சனம்.

கால்பந்தாட்ட வீரரான கதிர் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி எடுக்கிறார். இன்னொரு புறம் உள்ளூர் ரவுடிகள் விதிகள் இல்லாத கால்பந்து போட்டி நடத்தி பணம் பார்க்கிறார்கள். எதிர் அணியினரை கை கால்களையும் முறிக்கின்றனர். இந்த விளையாட்டை போலீஸ் எதிர்க்கிறது.

தாதா ஏ.பி.ஸ்ரீதர் ஆதரவோடு போட்டியை நடத்துகின்றனர். தனக்கு பயிற்சி அளித்த கிஷோர் இதே போட்டியில் விளையாடி உயிரை இழப்பதால் கதிரும் வைராக்கியத்தோடு விளையாட வருகிறார். போட்டியில் இரு அணிகள் இடையே சண்டை மூள போலீஸ் உள்ளூரில் விளையாட தடை விதிக்கிறது.

இதனால் சாத்தான் குளத்தை தேர்வு செய்து போட்டியாளர்கள் அங்கு செல்கின்றனர். அப்போது எதிர்பாராத அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. அதன் பின்னணி என்ன? கால்பந்து போட்டியில் கதிர் அணி ஜெயித்ததா? என்பது கிளைமாக்ஸ்.

கால்பந்து வீரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கதிர். மைதானத்தில் சூழ்ச்சியால் தாக்க வரும் எதிர் அணி வீரர்களை சாதுர்யமாக வீழ்த்தி ஆடுவதில் துடிப்பு. காதல் காட்சிகளிலும் கவர்கிறார். கிளைமாக்சில் சாமான்ய இளைஞர்களின் விளையாட்டு கனவை தகர்க்கும் வில்லனுடன் ஆவேசமாக சண்டை போடுகிறார். ரோஷினி அழகான காதலி. ஆனாலும் சிறிது நேரமே வருகிறார். கதிர் நண்பராக வரும் யோகிபாபு சிரிக்க வைக்கிறார். ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். பயிற்சியாளராக வரும் கிஷோர் மிடுக்கு. அவரது முடிவு பரிதாபம். லிஜிஸ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அமானுஷ்ய காட்சிகளில் இன்னும் பயமுறுத்தி இருக்கலாம். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் குமரன். சாம்.சி. எஸ். பின்னணி இசை பலம். சூர்யாவின் கேமரா கால்பந்து விளையாட்டை கண்முன் நிறுத்துகிறது.

Next Story