கால்பந்து வீரனின் லட்சியமும், அதற்கு குறுக்கே வரும் வில்லனும் படம் சாம்பியன் - விமர்சனம்


கால்பந்து வீரனின் லட்சியமும், அதற்கு குறுக்கே வரும் வில்லனும் படம் சாம்பியன் -  விமர்சனம்
x
தினத்தந்தி 10 Jan 2020 5:17 PM IST (Updated: 10 Jan 2020 5:17 PM IST)
t-max-icont-min-icon

கால்பந்து வீரனின் லட்சியம், சுசீந்திரன் இயக்கத்தில் தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  மாணவர் விஷ்வா கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். அபாரமாக விளையாடும் அவருக்கு இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது லட்சியம். “கால்பந்து விளையாட்டே வேண்டாம். நீ படித்து முன்னேறினால் போதும்” என்கிறார் விஷ்வாவின் தாயார். அம்மா ஏன் விளையாட்டுக்கு தடை போடுகிறார்? என்ற உண்மை விஷ்வாவுக்கு தெரியவருகிறது.

‘பிளாஷ்பேக்.’ விஷ்வாவின் அப்பா, மனோஜ் பாரதிராஜாவும் ஒரு கால்பந்து வீரர். ஒரு பிரச்சினை தொடர்பாக வில்லன் ஸ்டண்ட் ஷிவா மீது மனோஜ் போலீசில் புகார் கொடுக்கிறார். ஆத்திரம் அடைகிற ஷிவா, கால்பந்து மைதானத்திலேயே மனோஜை சதி செய்து கொலை செய்கிறார்.

இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற விஷ்வா தனது லட்சியத்தை மறந்து, அப்பாவை கொன்றவனை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அதற்கான சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறார். இதனால் விளையாட்டு மீதான கவனம் குறைகிறது. அதை கவனித்த ‘கோச்’ நரேன், புத்திமதி சொல்கிறார். என்றாலும் ஷிவாவை கொல்ல வேண்டும் என்ற முடிவில் விஷ்வா உறுதியாக இருக்கிறார்.

விஷ்வாவின் நடவடிக்கைகளை பார்த்து ஷிவா சந்தேகப்படுகிறார். தன்னை போட்டுத்தள்ள விஷ்வா முயற்சிக்கிறான் என்ற சந்தேகம் உறுதியானதும், விஷ்வாவை கொல்ல முயற்சிக்கிறார், ஷிவா. இரண்டு பேரில் வெற்றி யாருக்கு? என்பது ‘கிளைமாக்ஸ்.’

விஷ்வா, ஏழை-நடுத்தர குடும்பத்து பையனாக-அவருடைய அம்மாவுக்கு ஒரே மகனாக-கால்பந்து சாம்பியனாக-கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். கால்பந்து அவருடைய கால்களில் சர்க்கஸ் காட்டுவதில் ஆரம்பித்து, ஒவ்வொரு முறையும் ‘கோல்’ அடிப்பது வரை-ஒரு உண்மையான கால்பந்து வீரரையும், கால்பந்தாட்டத்தையும் நேரில் பார்த்த திருப்தி. கொலை வெறியை அவர் முகத்துக்கு கொண்டு வர முடியாதது, மைனஸ்.

கதாநாயகி மிருணாளினி, வசீகர முகம். ஸ்பெஷல் கிளாஸ்’ என்று சொல்லி வீட்டில் பணம் வாங்கி, அதை விஷ்வாவின் வளர்ச்சிக்கு கொடுப்பது, ரசனையான காட்சி. உடல் மொழியால் ஒரு கால்பந்து பயிற்சியாளராக வாழ்ந்து இருக்கிறார், நரேன். உச்சக்கட்ட காட்சியில் தானும் ஒரு கதாநாயகன் என்பதை நிரூபிக்கிறார். விஷ்வாவின் அப்பாவாக மனோஜ், ஒரு கணவராக-அப்பாவாக-வில்லனிடம் ஏமாந்து மாட்டிக்கொள்பவராக கதாபாத்திரம் உணர்ந்து மிக இயல்பாக நடித்து இருக்கிறார். ஸ்டண்ட் ஷிவா வில்லன் வேலைகளை மிக சரியாக செய்து இருக்கிறார். அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக கண்களால் வில்லத்தனம் செய்து மிரட்டுகிறார். ராஜீவ்காந்தி கதாபாத்திரத்தில் வரும் வினோத், சிறந்த குணச்சித்ர நடிப்பை வெளிப்படுத்துகிறார். வில்லன் கும்பல் மிரட்டும் அந்த ஒயின் ஷாப் காட்சியை எத்தனை படங்களில் பார்ப்பது?

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், இசையமைப்பாளர் அரோல் கரேலி, டைரக்டர் சுசீந்திரன் ஆகிய மூன்று பேரும் கைகோர்த்துக் கொண்டு படத்தின் வெற்றிக்கு உழைத்து இருக்கிறார்கள். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை வேகம்...வேகம்...வேகம். ஒரு ஏழை இளைஞரின் திறமை, அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கு தடையாக வரும் வில்லனின் கொலை வெறி ஆகிய இரண்டுக்கும் முடிச்சு போட்டு விறுவிறுப்பாகவும், சில திருப்பங்களுடனும் கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன். ‘சாம்பியன்,’ சாம்பியன்தான்!

Next Story