காதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது: “என் ஜாதகத்தில் திருமண யோகம் இல்லை” கவர்ச்சி நடிகை ஷகிலா சொல்கிறார்


காதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது: “என் ஜாதகத்தில் திருமண யோகம் இல்லை” கவர்ச்சி நடிகை ஷகிலா சொல்கிறார்
x
தினத்தந்தி 19 Dec 2020 11:00 PM GMT (Updated: 19 Dec 2020 8:49 PM GMT)

“என் வாழ்க்கையில் காதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது. ஆனால், என் ஜாதகத்தில் திருமண யோகம் இல்லை” என்று கவர்ச்சி நடிகை ஷகிலா கூறினார்.

முக்கிய பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறுகள், சமீப காலமாக திரைப்படமாகி வருகின்றன. விமான கம்பெனி தொடங்கிய கோபிநாத் வாழ்க்கை வரலாறு, சூர்யா நடிப்பில் ‘சூரரைப்போற்று’ என்ற பெயரில் படமானது. மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை, ‘டேர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை, ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இதேபோல், இந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கையும் படமானது.

கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, சுய சரிதையாக எழுதியிருந்தார். அது தற்போது, ஷகிலா என்ற பெயரில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படமாகி இருக்கிறது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கியிருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் ஷகிலா கலந்துகொண்டார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஷகிலா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்கள் சுயசரிதை எந்த வயதில் இருந்து ஆரம்பமாகிறது?, அதில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் உள்ளனவா?.

பதில்:- எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து, 35 வயது வரையிலான சம்பவங்கள், அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. 35 வயதுக்குள் வாழ்க்கையில் காதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது. என் ஜாதகத்தில், திருமண யோகம் இல்லை.


கேள்வி:- அரசியல்வாதி ஒருவருடன் காதல் ஏற்பட்டு, கல்யாணம் வரை நெருங்கி பழகியதாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்களே, அவர் என்ன ஆனார்?.

பதில்:- என் வருமானத்தை அம்மாவிடம் கொடுப்பதில் அந்த அரசியல்வாதிக்கு உடன்பாடு இல்லை. நான் சம்பாதிக்கிற பணத்தை அவரிடமே கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதனால் அவரைவிட்டு பிரிந்துவிட்டேன்.

கேள்வி:- சில்க் சுமிதாவுக்கும், உங்களுக்கும் மோதல் இருந்ததாக பேசப்பட்டதே, அது உண்மையா?.

பதில்:- சில்க் சுமிதாவை நான் அக்கா என்றுதான் அழைப்பேன். அவருக்கும், எனக்கும் எந்த மோதலும் இல்லை, கருத்து வேறுபாடும் இல்லை. அவருடைய மறைவு என்னை மிகவும் பாதித்தது.

யாரையும் உண்மையாக நம்பாதீர்கள்

கேள்வி:- உங்களுக்கு மது அருந்தும் பழக்கமும், புகைக்கும் பழக்கமும் இருந்ததே... இப்பவும் இருக்கிறதா?.

பதில்:- 2 பழக்கங்களையும் என்னால் விட முடியவில்லை.

கேள்வி:- மலையாளப் பட உலகில் உங்களை சிலர் மிரட்டியதாக பேசப்பட்டதே, அது உண்மையா?.

பதில்:- மிரட்டவும் இல்லை, கடத்தவும் இல்லை. “ஏம்மா உன்னை பார்த்து சிலரை பயப்பட வைத்துவிட்டாயே” என்று ஒரு கேரள மந்திரி ‘தமாஷ்’ பண்ணினார்.

கேள்வி:- நீங்கள் துணிச்சல் மிகுந்த பெண்ணா, கோழையா?.

பதில்:- நான் ஒரு கோழை. சொந்த சகோதரியிடமே ஏமாந்துபோய் விட்டேன்.

கேள்வி:- சில நடிகைகள் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்களே?, அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?.

பதில்:- யாரையும் உண்மையாக நம்பாதீர்கள். யாரிடமும் ஏமாந்து போகாதீர்கள். வாழ்க்கையை நேசியுங்கள்.

இவ்வாறு ஷகிலா கூறினார்.


Next Story