36 வருடங்களுக்கு பிறகும் ‘‘மறக்க முடியாத நடிகையாக இருப்பது எப்படி?’’ நதியா பேட்டி


36 வருடங்களுக்கு பிறகும் ‘‘மறக்க முடியாத நடிகையாக இருப்பது எப்படி?’’ நதியா பேட்டி
x
தினத்தந்தி 24 Jan 2021 4:00 AM IST (Updated: 24 Jan 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

‘‘36 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக நிலைத்து நிற்பது எப்படி?’’ என்று நடிகை நதியா கூறினார்.

நடிகை நதியா கேரளாவை சேர்ந்தவர். 1984-ல் ‘நோக்கதெ தூரத்து கண்ணும் நட்டு’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். 1985-ல் ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்தார். முன்னணி கதாநாயகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த இவர், ‘நம்பர்-1 கதாநாயகி’ என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

திருமணம் செய்துகொண்ட பிறகு சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இவருக்கு சனம், ஜனா என்று 2 மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே தோளுக்கு மேல் வளர்ந்த பெண்கள், தங்களை கவனித்துக்கொள்கிற அளவுக்கு விவரம் தெரிந்தவர்கள் என்பதால், நதியா மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் வந்த இவர், செல்போன் மூலம் ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நதியா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 36 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தீர்களோ... அப்படியே இருக்கிறீர்களே, எப்படி?

பதில்:- கட்டுப்பாடான சாப்பாடும், முறையான உடற்பயிற்சியும் செய்து வருகிறேன். வேறு எந்த ரகசியமும் இல்லை.

கேள்வி:- பொதுவாக கதாநாயகர்களுக்குத்தான் ரசிகைகள் இருப்பார்கள். உங்களுக்கு மட்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளிலும் ரசிகைகள் இருக்கிறார்களே... எப்படி?

பதில்:- ‘பூவே பூச்சூடவா’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம்தான் காரணம். குறும்புத்தனமும், நிறைய பாசமும் கலந்த அந்த பேத்தி கதாபாத்திரம், எல்லோருக்குமே பக்கத்து வீட்டு பெண் போல் தெரிந்தாள். எல்லோருடைய மனதிலும் ஆழமாக பதிந்து விட்டாள். மறக்க முடியாத கதாபாத்திரமாகி விட்டாள்.

கேள்வி:- குடும்பத்தையும் கவனித்துக்கொண்டே நடிப்பதில் சிரமம் இல்லையா?

பதில்:- குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு நடிப்பையும் விடாமல் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். அதற்காக சின்ன ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேன். குழந்தைகள் பெரியவர்களாகி விட்டபின், நடிப்பதை மறுபடியும் தொடர முடிகிறது.

கேள்வி:- உங்கள் மகள்கள் என்ன செய்கிறார்கள்?

பதில்:- மூத்த மகள் சனம் அமெரிக்காவில் வேலை செய்கிறாள். இளைய மகள் ஜனா அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறாள்.

கேள்வி:- உங்கள் மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிற அளவுக்கு உயர்ந்திருப்பது பற்றி...?

பதில்:- ஒரு நடிகையாக அவரை நான் பாராட்டுகிறேன். அவருக்கு தென்னிந்தியாவில் கிடைத்துள்ள அடையாளம் வரவேற்புக்குரியது. நாங்கள் இருவரும் சில நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசியிருக்கிறோம். அப்போது அவரை நான் பாராட்டி பேசினேன்.

கேள்வி:- இப்போதைய கதாநாயகிகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இப்போதைய கதாநாயகிகளில் பெரும்பாலானவர்கள் திறமைசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில், அதிக கவனம் செலுத்துகிறார்கள். சிலர் உடைகளை குறைத்து நடிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

கேள்வி:- இன்றைய கதாநாயகர்களில், உங்களுக்கு பிடித்தவர் யார்?

பதில்:- ஒரு படத்தில் ஒரு நடிகர் திறமைசாலியாக தெரிந்தால், அடுத்த படம் பார்க்கும்போது, அந்த படத்தின் கதாநாயகன் திறமைசாலியாக தெரிகிறார். இளைய தலைமுறை கதாநாயகர்கள் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் அல்ல என்று நிரூபித்து வருகிறார்கள். அருமையாக நடிக்கிறார்கள்.’’ இவ்வாறு நதியா கூறினார்.

Next Story