அரசியலுக்கு வராதது ஏன்? நடிகர் அர்ஜுன் விளக்கம்


அரசியலுக்கு வராதது ஏன்? நடிகர் அர்ஜுன் விளக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:02 PM GMT (Updated: 20 Feb 2021 12:02 PM GMT)

கன்னட நடிகர் துருவா சார்ஜா ‘செம திமிரு' என்ற படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இவர் நடிகர் அர்ஜுன் மருமகன் ஆவார். ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். நந்தகிஷோர் இயக்கி உள்ளார். துருவா சார்ஜாவை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் அறிமுகம் செய்து பேசியதாவது:-

“எனது தங்கையின் மகன் துருவா. அவருக்கு கதாநாயகனாகும் எண்ணம் இருந்ததால் கடுமையாக உழைத்து சுயமாக ஒரு கதையை உருவாக்கி அதில் நடித்து அந்த வீடியோவை என்னிடம் காட்டினார். அதை பார்த்து அசந்துப்போனேன். இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார். தரமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். செம திமிரு அதிரடி படமாக வந்துள்ளது. இந்த படத்தில் அவர் 16 வயது பையனாகவும் வளர்ந்த இளைஞனாகவும் இரு தோற்றங்களில் வருகிறார். சிறுவயது தோற்றத்துக்காக 40 கிலோ எடை குறைத்தார். படத்தில் ஆக்‌ஷன் தூக்கலாக இருக்கும். சர்வதேச பாடிபில்டர்களும் நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் சண்டை பேசப்படும். நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிறது. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள். அரசியலில் ஈடுபடுவதற்கு நிறைய அறிவு வேண்டும். அது எனக்கு இல்லாததால் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் ஒரு நாள் முதல்வர் ஆகிவிடலாம். அரசியல் அப்படி இல்லை.

இவ்வாறு பேசினார். படத்தை கே.கங்காதர், சிவா அர்ஜுன் ஆகியோர் தயாரித்துள்ளனர். டி.முருகானந்தம் வெளியிடுகிறார்.


Next Story