காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை; சமீபத்தில் கலைமாமணி விருது பெற்ற நடிகை தேவதர்ஷினியிடம் சிறு நேர்காணல்
சமீபத்தில் கலைமாமணி விருது பெற்ற நடிகை தேவதர்ஷினியிடம் சிறு நேர்காணல்
* உங்களுடைய திரை வாழ்க்கையின் தொடக்கம் பற்றி கூறுங்கள்?
சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோது, டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. அதுதான் என்னுடைய ‘முதல் எண்ட்ரி’. பிறகு 3-ம் ஆண்டு படிக்கையில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘மர்மதேசம்’ திகில் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி படிப்போடு சேர்த்து ‘பார்ட் டைம்’ முறையில்தான் டி.வி.நிகழ்ச்சிகளில் நடிக்க, ஆங்கரிங் செய்ய ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வரவே, அதை முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டேன்.
* ஆரம்பத்தில் எத்தகைய கதாபாத்திரங்களை எதிர்பார்த்தீர்கள்?
எதிர்பாராத வாய்ப்புகள் மூலமாகவே நான் திரைத்துறைக்குள் நுழைந்தேன். நடிப்பதும், டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் என் வாழ்க்கை திட்டங்களில் துளியும் இல்லை. இருப்பினும் அடுத்தடுத்த வாய்ப்புகள் தானாவே கனிந்ததால், அதை ஏற்றுக்கொண்டு நடிக்க ஆரம்பித்தேன்.
* டி.வி.யில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தது எப்படி?
மர்மதேசம், ரமணி வெர்சஸ் ரமணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா... போன்ற டி.வி.தொடர்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், சில சினிமா வாய்ப்புகளும் வந்தன. குறிப்பாக பார்த்திபன் கனவு, எனக்கு 20 உனக்கு 18, காக்க காக்க போன்ற படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தேன்.
* காமெடிக்கு மாறிய கதையை கூறுங்கள்?
நான் ரொம்ப ‘சீரியஸ் டைப்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ரமணி வெர்சஸ் ரமணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நகைச்சுவை தொடர்களில் நடித்தபோதுதான் என் மீதான கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டேன். எவ்வளவு கனமான கதாபாத்திரத்தையும் எதார்த்தமாக, நகைச்சுவையாக கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். சில திரைப்படங்களிலும் அதை நிரூபித்திருப்பேன். இருப்பினும் ‘காஞ்சனா’ திரைப்படம் என்னை காமெடி நடிகையாகவே மாற்றிவிட்டது. அதற்கு பிறகு ரொம்பவும் காமெடியான கதாபாத்திரங்களிலே நடித்திருக்கிறேன். ஒருசில
குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறேன்.
* காமெடி, குணசித்திர வேடம் இவ்விரண்டில் உங்களுக்கு விருப்பமானது எது?
காமெடியோ, குணசித்திர வேடமோ அல்லது கனமான கதாபாத்திரமோ, எதுவாக இருந்தாலும் நடிப்பு திறனை வெளிக்காட்டக்கூடியதாக இருக்கவேண்டும். அதேபோல புது அனுபவமாகவும் இருக்கக்கூடிய
கதாபாத்திரங்களையே விரும்புகிறேன்.
* நீங்கள் நடித்த காமெடி காட்சிகளில், உங்களுக்கு பிடித்த காட்சி எது?
ரமணி வெர்சஸ் ரமணி டி.வி. தொடர் ரொம்பவும் பிடிக்கும். அதில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது.
* நடிப்பை தாண்டி, நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி?
நிஜ வாழ்க்கையிலும் நான் காமெடியான கேரக்டர்தான். நடிகையாக அறியப்பட்டாலும், 17 வயது மகளுக்கு பொறுப்பான அம்மாவாகவும், கணவருக்கு அன்பான மனைவியாகவும், பெற்றோருக்கு பாசமிகு மகளாகவும் கடமையை ஆற்றுகிறேன். அதேசமயம் நான் ஒரு மனநல மருத்துவர். சைக்காலஜிஸ்ட் முடித்திருக்கிறேன். மேற்படிப்புகளையும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு நேரம் போக, ஓய்வு நேரங்களில் ஒருசிலருக்கு மட்டும் மனநல ஆலோசனைகள் வழங்குவதுண்டு.
* கலைமாமணி விருது பெற்ற அனுபவத்தை கூறுங்கள்?
நடிகையாக, எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் இது. 25 வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கும் எனக்கு, கலைமாமணி விருது கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இன்னும் அதிக காலம் பயணிக்க, இந்த விருது உத்வேகத்தை கொடுக்கும். அழுது நடித்து, மக்களை அழவைப்பது சுலபம். சிரிக்க வைப்பதுதான் சவாலானது. அந்த சவாலில் வென்றதற்கு, இந்த கலைமாமணி சான்றாகிறது.
* கலைமாமணி விருதை குடும்பத்தினர் எப்படி கொண்டாடினார்கள்?
என் கணவர் சேட்டனும் நடிகர் என்பதால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியானது. கணவராகவும், கலைஞராகவும் கலைமாமணி விருது பெற்றதை கொண்டாடி மகிழ்ந்தார். என் பெற்றோருக்கும், மகளுக்கும் அரசு விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
* காஞ்சனா திரைப்படத்தின் ஹீரோ உங்கள் இடுப்பில் ஏறிக்கொள்வார். அதை பார்த்து இப்போதும் உங்கள் மகள் இடுப்பில் ஏறி அமர்ந்து கொள்வது உண்டா?
(சிரிக்கிறார்) அதுபோல சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஆனால் இப்போது இல்லை. என் மகள் 6-7 வயதில் இருக்கையில், திரைப்படத்தில் வருவதை போலவே ஓடி வந்து என் இடுப்பில் ஏறி அமர்ந்து கலாட்டா செய்திருக்கிறாள்.
Related Tags :
Next Story