“இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது” - கவிஞர் வைரமுத்து
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 8.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவு நாடு முழுவதும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-
“இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த காலத்தின் மீது தன்னுடைய இசை என்ற ஆதிக்கத்தைச் செலுத்தியது.
அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும் தான். உழைக்கும் மக்கள் அவர் பாடிய பாடலைக் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள், காதலை வளர்த்திருக்கிறார்கள், தங்கள் வியர்வையை சுண்டி எறிந்திருக்கிறார்கள், தங்கள் துக்கத்தை மறந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார்கள்.
இந்தியர்களின் வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க, அவர் பாடல்கள் வெல்க!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய
— வைரமுத்து (@Vairamuthu) February 6, 2022
இசைக் குயிலுக்குத்
தமிழ் அஞ்சலி#LataMangeshkarpic.twitter.com/dxFX43qIBV
Related Tags :
Next Story