வாலாஜா அருகே; அடுப்புக்கரி மண்டியில் கொத்தடிமைகளாக இருந்த 13 பேர் மீட்பு


வாலாஜா அருகே; அடுப்புக்கரி மண்டியில் கொத்தடிமைகளாக இருந்த 13 பேர் மீட்பு
x
தினத்தந்தி 11 April 2021 3:36 PM GMT (Updated: 11 April 2021 3:36 PM GMT)

வாலாஜா அருகே அடுப்புக்கரி மண்டியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 13 தொழிலாளிகளை மீட்டு உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிப்காட் (ராணிப்பேட்டை)

வாலாஜா அருகே அடுப்புக்கரி மண்டியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 13 தொழிலாளிகளை மீட்டு உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கரிமண்டி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே அனந்தலை மதுரா, மேல்புதுப்பேட்டை கிராமத்தில் அடுப்புக்கரி தயாரிக்கும் மண்டி இயங்கி வருகிறது. இங்கு மரக்கரி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 

இந்த பணியில் வாலாஜா தாலுகா குடிமல்லூர் கிராமம், கால்வாய் கரை பகுதியில் வசிக்கும் சங்கர், சித்ரா, சத்யா, சீனு மகாலட்சுமி, சரத்குமார், தேவி, சந்தோஷ், ரஞ்சித், பார்த்தீபன், பச்சையப்பன், கோவிந்தம்மாள், ரேணுகா ஆகிய 13 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் மற்றும் வாலாஜா தாசில்தார் ஜெயபிரகாஷ் ஆகியோர் அந்த கரிமண்டிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில் உரிமையாளர் அருண்குமார் என்ற ராமலிங்கம் (வயது 41) மற்றும் அவருடைய டிரைவர் தென்றல் (27) ஆகியோரிடம் உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தினார்.

அடித்து துன்புறுத்துகின்றனர்

அப்போது இருளர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்களான இவர்கள் மரத்தை வெட்டி கரிமூட்டம் போட்டு மரக்கரி தயாரிக்கும் வேலை செய்து வருவதாகவும், முன்பணக் கடன் தந்து அதை திரும்ப கட்டும் வரை தொடர்ந்து வேலை வாங்கி வருவதாகவும், வெற்று பேப்பரில் பாண்டு எழுதி வாங்கிக் கொண்டு கடுமையாக வேலை வாங்குவதாகவும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் உதவி கலெக்டரிடம் தெரிவித்தனர். 

இந்த தொழிலாளர்கள் முன்பண கடன் திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு ஊரில் இருந்து கட்டாயப்படுத்தி, டாட்டா ஏஸ் வண்டியில் அழைத்து சென்றும் வேலை செய்ய வைத்த கொடுமை நடந்துள்ளது. 

கைப்பற்றினார்

இதனையடுத்து மண்டி உரிமையாளர் அருண்குமாரிடமிருந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட முன்பண பதிவேடுகள், கூலி பதிவேடுகள், முன்பண கடன் அளித்ததற்காக தொழிலாளிகளிடம் வெற்று பேப்பரில் கையொப்பம் பெறப்பட்ட பத்திரங்கள் ஆகியவற்றை உதவி கலெக்டர் இளம்பகவத் அதிரடியாக கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

முடிவில் மேற்குறிப்பிட்ட 3 குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள், 4 ஆண்கள், 4 குழந்தைகள் உள்பட 13 ேபர்களை விடுவித்தும், பிரிவு 6-ன் கீழ் அவர்களது கொத்தடிமை கடன்கள் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 900-ஐ ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

மேலும் அனந்தலை கிராம நிர்வாக அலுவலர் அதியமான் வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் மண்டி உரிமையாளர் அருண்குமார் என்ற குட்டி, அவரது டிரைவர் மற்றும் மேற்பார்வையாளர் தென்றல் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய புகார் அளித்தார்.

மீட்பு

அதன் மீது வாலாஜாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களது வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட அனைவருக்கும் விடுதலை சான்று வழங்கப்பட்டது.

Next Story