ஸ்டைலாக கண்ணாடி அணிய பியர் கிரில்சுக்கு கற்று தந்த நடிகர் ரஜினிகாந்த்
‘இன்டூ தி வைல்ட்’ நிகழ்ச்சியில், ஸ்டைலாக கண்ணாடி அணிவது எப்படி என பியர் கிரில்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் கற்று கொடுத்த காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளன.
பந்திப்பூர்,
டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று சவால்களை சந்தித்து மேற்கொள்ளும் இந்த ஆபத்தான பயணத்தில் தன்னுடன், சிறப்பு விருந்தினர்களாக பிரபலங்களை அழைத்து செல்வது வாடிக்கை. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவையும், ஆபத்தான பயணத்துக்கு அவர் அழைத்து சென்றது உண்டு. யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி, பியர் கிரில்சுடன் காட்டுக்குள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் அடர்ந்த காட்டுக்குள், நடுங்க வைக்கும் குளிரில் பிரதமர் மோடியும், பியர் கிரில்சும் மேற்கொண்ட சாகச பயணம் புல்லரிக்க வைத்தது. இந்த பயணம் தொடர்பான நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பிறகு தமிழ் திரையுலக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய்குமாரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் சாகச பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி குழும சேனல் செய்தது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பியர் கிரில்ஸ் பங்கேற்ற சாகச பயணம், கடந்த ஜனவரியில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் தேசிய பூங்காவில் அடர்ந்த காட்டுக்குள் 6 மணி நேரம் வரை நடந்தது.
இந்நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை, கடந்த பிப்ரவரி 19ந்தேதி பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், 40 வினாடிகள் ஓட கூடிய டீசர் கடந்த பிப்ரவரி 27ந்தேதி வெளியானது.
இந்நிலையில், நிகழ்ச்சியின் 2வது டீசர் இன்று வெளியானது. ஒரு நிமிடம் ஓட கூடிய இந்த வீடியோவில் பியர் கிரில்சுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் மலையேற்றம் செய்வது போன்றும், ஜீப்பில் பயணிப்பது போன்றும், வனத்தில் உள்ள குளத்து நீரின் ஊடே செல்வது போன்றும் காட்சிகள் அமைந்துள்ளன. பின்னர், வன பகுதியில் செல்ல கூடிய வாகனத்தில், தனியாளாக அதனை ஓட்டி செல்வதும், தனக்கே உரிய வகையில் கண்ணாடியை ஸ்டைலாக அணிவது எப்படி என கிரில்சுக்கு செய்து காண்பிப்பது போன்றும் மற்றும் பல ஆபத்து நிறைந்த சாகச காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை வெளியான ஒரே நாளில் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர். வருகிற 23ந்தேதி இரவு 8 மணியளவில் இந்நிகழ்ச்சி டிஸ்கவரியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story