நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி


நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 12 July 2020 3:32 PM IST (Updated: 12 July 2020 3:32 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புனே,

இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று  மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.

அவர்கள் குணமடைந்து திரும்ப வேண்டும் என அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வேண்டி கொண்டுள்ளனர்.   நடிகர் ரஜினி காந்த் அமிதாப்பச்சனை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் உடல் நல பிரச்சினைகளை கடந்து விடுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், அமிதாப் பச்சனின் மருமகள் மற்றும் அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உறுதிப்படுத்தி உள்ளார்.

Next Story