நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வழக்கு


நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வழக்கு
x
தினத்தந்தி 5 Dec 2021 3:10 PM IST (Updated: 5 Dec 2021 3:10 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய நபர் அவர் மீது வழக்கு தொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

கடந்த மாதம் 2-ந்தேதி பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து நடிகர் விஜய் சேதுபதியை குடிபோதையில் ஒருவர் தாக்கினார். அது தொடர்பான  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில், விஜய் சேதுபதியை தாக்கிய நபர் தற்போது, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த நபர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி ஆவார். அந்த மனுவில் அவர், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக கடந்த நவம்பர் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்திற்கு  சென்ற போது, அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாகவும் அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த போது, வாழ்த்துக்களை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன் தன்னுடைய சாதியைப் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன்மீது விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு நடந்திருக்க மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பியதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டியிருக்கிறார். 

நடிகர் விஜய் சேதுபதி மீதும் அவரது மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story