’அப்டேட்’ கேட்ட ரசிகர்களுக்கு விருந்து படைத்த வலிமை மேக்கிங் வீடியோ...!
நடிகர் அஜித்குமார் இப்படத்திற்கு தன்னை அர்ப்பணித்ததை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்
சென்னை ,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். சினிமா உலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் மட்டுமே தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். ஆரம்ப காலங்களில் இவரது பல படங்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் , ஒவ்வொரு முறையும் தோல்விக்கு பிறகு மீண்டும் மிரட்டலான வெற்றியை தனது படங்கள் மூலம் பதிவு செய்தவர்.எவ்வளவு துவண்டாலும் வலிமையாக மீண்டு வருவதில் அஜித்குமாருக்கு நிகர் அவரே என கோலிவுட் சினிமாவுக்கு உரக்க சொன்னவர். அதே போல் ஒரு கதையே தற்போதும் நிகழ்ந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அஜித் அவர்களின் திரைப்படம் ஒன்று கூட வெளியாகவில்லை. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை தான் அஜித் அவர்களின் கடைசி திரைப்படம். இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பாலிவுட் படமான "பிங்க் " படத்தின் ரீமேக்காகும்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் கூட்டணியில் அந்த ஆண்டே அஜித் அவர்கள் தனது அடுத்த படத்தில் நடிக்க தொடங்கினார்.இதற்கு வலிமை என பெயரிட்டு இருந்தனர். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வந்தார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்து வந்தார். 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் அஜித் குமாரின் திரைப்படம் மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து சினிமா சார்ந்த படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டன. கொரோனா தொற்று குறைந்த பிறகு மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியதும் மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினர்.அஜித்குமார் அவர்களும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார்.
மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி படத்தின் பெயரை தவிர எந்த ஒரு அப்டேடும் வெளிவராத காரணத்தால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருந்தனர். இதனால் அவ்வப்போது "வலிமை அப்டேட் " என்ற ஹாஷ்டேக் சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகி வந்தது.
மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த சமயத்தில் வில்லன்களுடன் அஜித்குமார் பைக்கில் சென்று சண்டையிடுவது போன்ற காட்சிகளை எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பைக் சரிந்து விபத்து ஏற்பட்டு அஜித்குமாருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் அவருக்கு முதல்உதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரம், ஓய்வுக்கு பின் மீண்டும் அந்த காட்சியில் அஜித்குமார் நடித்து கொடுத்துவிட்டு சென்னை திரும்பினார்.
ஊரடங்கு பாதிப்பு , படப்பிடிப்பின் போது காயம் என பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனாலும் ஒரு வழியாக இந்த ஆண்டு வெற்றிகரமாக படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து இந்தப் படத்தின் ' நாங்க வேற மாறி' பாடல் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த பாடல் யூடியூப் இணையதளத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனையடுத்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் வலிமை படத்தின் 2-வது பாடலை படக்குழு கடந்த 4 ஆம் தேதி வெளியிட்டது.யுவன் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் சித்ஸ்ரீராம் இப்பாடலை பாடியிருந்தார். இந்த பாடலும் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது . அதற்கு முக்கிய காரணங்களும் உள்ளன.
இந்த மேக்கிங் வீடியோவின் தொடக்கத்தில் வரும் வசனங்கள் கொரோனாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதில் " அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருந்தபோது கொரோனா அனைவரின் வாழ்க்கையும் கடினமாக்கியது. மீண்டும் எப்போது நாங்கள் படப்பிடிப்பை தொடங்குவோம் என அனைவரும் ஏங்கினோம் . கடினமான காலகட்டங்களிலும் ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் அன்பை எங்களுக்கு தர தவறவில்லை. உங்களது அன்பு எங்களை மேலும் வலிமையாக்கியது. அதனால் ஊரடங்கிற்கு பிறகு நாங்கள் மீண்டும் மீண்டு வந்தோம் " என வரிகள் இடம்பெற்றுள்ளது.
அது மட்டுமின்றி இந்த வசனங்கள் தோன்றும்போதே "வலிமை அப்டேட் " என ரசிகர்கள் பலரது குரல்கள் ஒலிக்கின்றன. பின்னர் அஜித்குமார் அவர்கள் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சி தொடங்குகிறது. யாரும் எதிர்பாராத வகையில் படக்குழு அஜித் அவர்கள் முதலில் ஸ்டண்ட் செய்து கீழே விழும் காட்சியை இந்த மேக்கிங் வீடியோவில் படமாக்கியுள்ளனர்.
அப்போது தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகள் தோன்றுகின்றன . அதில் "ஓர் போர்க்களத்தில் நாம் நிலைதடுமாறி கீழே விழுந்தால் போர்க்களத்தை விட்டு ஓடாமல் மீண்டும் எழுந்து போர் செய்தோம் என்பதே போதுமானது " என்ற வரிகள் தோன்றுகின்றன. பின்னர் அஜித்குமார் மீண்டும் அதே காட்சியை வெற்றிகரமாக ஸ்டண்ட் செய்து முடிக்கும் காட்சியுடன் இந்த மேக்கிங் வீடியோ முடிவடைகிறது.
Get ready with Ur Earphones
— Boney Kapoor (@BoneyKapoor) December 14, 2021
Here comes the action-packed #ValimaiMakingVideo! 🔥
➡️ https://t.co/TiSawG30HD#AjithKumar#HVinoth@thisisysr@BayViewProjOffl@ZeeStudios_@sureshchandraa@vigneshshivN@sidsriram@SonyMusicSouth#NiravShah@humasqureshi#ValimaiPongal#Valimai
இப்படம் நிறைவு பெறுவதற்குள் பல தடங்கல்கள் வந்தாலும் அஜித்குமார் மற்றும் படக்குழு அனைவரும் அதில் இருந்து மீண்டு வந்து இதை நிறைவு செய்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த அஜித் குமாரின் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த மேக்கிங் வீடியோ பெரும் விருந்தாக இருக்கும்.குறிப்பாக நடிகர் அஜித்குமார் இப்படத்திற்கு தன்னை அர்ப்பணித்ததை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் .தற்போது இந்த மேக்கிங் வீடியோ யூடியூபில் 2 மணி நேரத்தில் 13 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story