கரீனா கபூர், அம்ரிதாவை தொடர்ந்து நடிகை ஷனாயா கபூருக்கு கொரோனா உறுதி
கரீனா கபூர், அம்ரிதா அரோராவை தொடர்ந்து நடிகை ஷனாயா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
புனே,
மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கரீனாவும், அம்ரிதாவும் பங்கேற்றனர். அந்த புகைகப்படத்தை இன்ஸ்டாகிராம் சமூக வளைத்தளத்தில் கரீனா பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில், மல்லிகா அரோரா, கரீஷ்மா கபூர், கரீனா கபூரின் மேலாளர் மசாபா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் நடிகரும் இந்தி திரைப்பட இயக்குநருமான கரண் ஜோகர் வீட்டில் நடைபெற்ற விருந்திலும் இவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நடிகை அலியா பட் மற்றும் அர்ஜூன் கபூர் உள்பட இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர்கான் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நடைபெற்ற பரிசோதனையின் முடிவுகளின்படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி இருவரும் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்றால் கரீனா கபூர், அம்ரிதா அரோரா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
பிரபல நடிகையான கரீனா கபூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்போது அமீர் கானுடன் லால் சிங் தத்தா என்ற திரைப்படத்திலும், ரன்வீர் சிங்குடன் தகத் என்ற திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கரண் ஜோகர் இல்லத்தில் அளித்த விருந்தில் கலந்து கொண்டவர்களில் நடிகை ஷனாயா கபூரும் ஒருவர். இவர் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஆவார். சஞ்சய் கபூரின் மனைவி மஹீப் கபூரும் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து மஹீப்பின் மகள் மற்றும் இளம் நடிகையான ஷனாயா கபூருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷனாயா, 4 நாட்களுக்கு முன் தொற்று இல்லை என முடிவு வந்தது. எனினும், முன்னெச்சரிக்கையாக மீண்டும் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்து உள்ளது.
லேசான அறிகுறிகளே உள்ளன. நன்றாகவே உணர்கிறேன். தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் உறவினரான ஷனாயா கபூர், ஜான்வி நடித்த கஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். கரண் ஜோகரின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தனது அறிமுக படத்தில் ஷனாயா கபூர் நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story